பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வனதேவியின் மைந்தர்கள்

மகிமை பொருந்திய, மாமன்னர், தருமபரிபாலனம் செய்யும் கோசலநாட்டுப் பிரான், அந்தத் திருமகனின் பக்கம்தானே இவருடைய வெண்கொற்றக் குடையும் சாயும்? அத்துணை இடைஞ்சலிலும் கடல் தாண்டித் துதுவந்த வானர வம்சத்தினனும் இவள் பக்கம் இளகவில்லையே? நியாயங்கள் மண்ணையாளும் வேந்தர் பக்கமே! நியாயங்கள் எல்லாம் மேற்குல ஆதிக்கங்களுக்கே.

“கண்ணம்மா.”

நைந்தகுரல் அவளை உலுக்குகிறது. பெரியன்னைக்கு மூச்சுத் திணறுகிறது.

“அவரைப் பணிந்துகொள்ளம்மா! நீயும் உன் மக்களும், இந்தக் கானகத்தில் உணவுக்கும் உடைக்கும் இருப்புக்கும் நெருப்புக்கும் பொழுதெல்லாம் போராடும் வாழ்வுக்கோ உனை விதித்தது? மேலும் இந்தப் போர் முடிவு பெற வேண்டும். அவரே நடுநிலையில் நிற்கக்கூடியவர்.”

பூமகள் அவள் கையை அழுந்தப் பற்றுகிறாள். அவள் எழும்பும் மார்பை மடியில் சாத்திக் கொண்டு நீவி விடுகிறாள்.

“குழந்தாய், நாம் எதிர்த்துக் கேட்க இயலாத அபலைகளாகிப்போனோம். அதனால் இலகுவில் தியாகிகள் என்ற பெயரை வாங்கிக் கொள்ள வருத்திக் கொள்கிறோம். நீ தியாகியாகி இந்த மண்ணில் மடிய வேண்டாம். உன் தந்தை உன்னை மீண்டும் ஏற்க வந்துள்ளார்.”

“இல்லை தாயே, நான் இப்போது சுதந்தரமானவளாக இருக்கிறேன். என் மைந்தர்களுக்கும் தம் ஆதிக்க குலம் பற்றிய தன்னுணர்வு வரவேண்டாம். இந்தக் கானகத்தில் மனிதர்களோடு, விலங்குகளோடு, இயற்கையோடு வாழும் வாழ்வே எங்களுக்கு ஏற்புடையது’

“மகளே, உன்மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களுக்கு, உன் நியாயத்தை நிரூபிக்க வேண்டாமா?.”

கேகய அன்னைக்கு அவள் தலையசைக்கிறாள்.