பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

55


எனவே என்னை நம்புங்கள்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு அக்கரை சென்றது. பசு.

புலி, எதுவும் செய்ய இயலாமல் நின்றது. பாய முற்பட்ட அதன் அரக்க வேகம் கட்டுப்பட்டுவிட்டது. அக்கரையில் பசு, கன்றை முகர்ந்து நக்கிக் கொடுத்து பாலூட்டியது. “குழந்தாய், அக்கரையில் ஒரு புலியின் பசி தீர்க்க நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். சற்று நேரத்தில் நான் இரையாகப் போகிறேன்.நீ நன்கு பசியாறி, தானாக உணவு தேடிக்கொள்ள உறுதி கொள். சத்தியம் தவறாமல் வாழ்க்கையில் கருணை வடிவாக நில்” என்று, அதை முகர்ந்து ஆசி கூறிவிட்டுப் பசு புலியை நோக்கி ஆறு கடந்து வந்தது.

“புலியே, என்னை உணவாக்கிக் கொண்டு பசியாறுங்கள்!” என்றது. புலி உடனே, “பசுவே, நீ சத்தியத்தின் வடிவம் என்னுள் கிளர்ந்த பசி அடங்கி விட்டது. பசி இல்லாத போது, நான் யாரையும் கொல்ல மாட்டேன்” என்று கூறிவிட்டு உடனே திரும்பி விட்டது.

“எப்படி கதை?”

அந்தக் கதை எத்துணை உயிர்ப்புடன் அவளுடைய மனதை ஆட்கொண்டது! பசுவாகவும் புலியாகவும், சித்திர விளையாட்டு விளையாடியிருக்கிறாள். கோசல அரசகுமாரர் அந்தப் பழைய வில்லை ஒடித்துவிட்டார் என்ற சேதி கேட்டபோது, அந்தப் புலி திரும்பிப் போய் விட்டதை நினைத்துக் கண்ணிர் துளிக்க மகிழ்ந்தாளே!...

“தேவி. மன்னர் தங்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்!” படிகளின் மேல், பூஞ்செடிகளுக்கிடையே இருந்து தெரிவிப்பவள்... ஜலஜை.

அம்பு மானின் மீது பாய்ந்துவிட்டாற் போன்ற குலுக்கலுடன் அவள் எழுந்திருக்கிறாள்.