உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

85

சுதாவும் அங்கே வருகிறாள்.

“கருப்பஞ்சாறு சேர்த்த பொங்கல் மிக நன்றாக இருக்கிறது. அக்கா, இன்று உபவாசமா? மன்னர் வரவில்லை என்று கோபமா?” என்று கிண்டுகிறாள்.

“உனக்கென்னம்மா! பேசுவாய்! உன்னுடையவரை உன் மேலாடை முடிச்சில் கோத்து வைத்திருக்கிறாயல்லவா? நாங்கள் தாம் ஏமாளிகள். உன் இன்னோர் அக்கா, விரதம், தவம் என்று தன் நாயகரை அங்கு இங்கு திரும்பவிடாமல் கட்டிப் போட்டு விட்டாள். நானும் பூமையுமே ஏமாளிகள்!”

பூமகள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“போதுமடி குற்றம் சுமத்தலெல்லாம்! என்னை இப்போது தனியே விட்டு விட்டுப் போங்கள்!”

அப்போது சுமித்ரா தேவி. ராணிமாதா அங்கு வருகிறாள்.

“ஒத்தவன் - ஓரகத்தி என்ற காய்ச்சல் வர இடமில்லாமல் சகோதரிகளாக என் மருமக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இங்கே என்ன பலத்த வாக்குவாதம்...? உணவு கொள்ள வாருங்கள். இலைவிரித்து எல்லாம் பரிமாறக் காத்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றி தைல’ நீராட்டு முடிந்து வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது; பூமா... வாம்மா!.”

“அம்மா, அவர்கள் உணவு கொள்ளட்டும். எனக்குப் பசியே இல்லை.”

“ஒ... இது நன்றாயிருக்கிறது! நீலன் சமையல் மூக்கை இழுக்கிறது. ஏதேதோ வாசனைகள் சேர்த்து, பக்குவம் செய்து க்கிறான். எழுந்திரு மகளே, வா.. இந்த நேரம், உயிர்க்கருவைப் பாலிக்க இரு மடங்கு உணவு கொள்ள வேண்டும்...”

“தாயே, எனக்கு இந்த ஊன் உணவு எதுவும் பிடிக்க வில்லையே?”

“தெரியும். உனக்கென்று பாலமுதம் கீரை, காய்கள், கனிகள் வியஞ்சனங்கள், உப்பிட்ட கிழங்கு, எல்லாம் செய்திருக்கிறோம்.