92
வனதேவியின் மைந்தர்கள்
இருட்டாக்கி, திரைச் சீலைகளை இழுத்துவிட்டு, பஞ்சனையில் அவளைப் படுக்கச் செய்கிறாள்.
பூமை சிறிது நேரத்தில் உறங்கிப் போகிறாள். மனதில் ஒன்றுமே இல்லை. நடப்பது நடக்கட்டும். ஆம் நடப்பது நடக்கட்டும். என்ற உறுதியை அவள் பற்றிக் கொண்டிருக்கிறாள்.
ஆழ்ந்த உறக்கம். கனவுகளும் காட்சிகளும் தோன்றாத உறக்கம். விழிப்பு வரும்போது எங்கோ மணி அடிக்கிறது. மணி. விடியற்காலையில் அருணோதயத்துக்கு முகமன் கூறும் மணி அல்லவோ இது!...
பூமகள் மெள்ளக் கண்களை அகற்றுகிறாள்.
படுக்கையைச்சுற்றி மெல்லிய வலைச்சீலையை விலக்கிப் பார்க்கிறாள். மாடத்தில் மினுக் மினுக் கென்று ஒர் அகல் வெளிச்சம் காட்டுகிறது. அவந்திகா கீழே அயர்ந்து உறங்குகிறாள். அவளுடைய தளர்ந்த சுருக்கம் விழுந்த கை. அதைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஒரு கோரைப் பாயில் உறங்குகிறாள். வெளியே அரவம் கேட்கிறது....
“மகாராணிக்கு மங்களம்...” என்று சொல்லிவிட்டு, கிழட்டுக் குரல்,
“செம்மை பூத்தது வானம்.
செந்தாமரைகள் அலர்ந்தன.
செகம்புகழ் மன்னரின் பட்டத்து அரசியே,
கண் மலர்ந்தருள்வீர்...”
என்று பள்ளி யெழுச்சி பாடுகிறது.
தாம் எப்போது படுத்தோம் என்று சிந்தனை செய்கிறாள். கூடவே, மன்னர் இரவு வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ என்ற இழப்புணர்வும் அடிவயிற்றில் குழி பறிப்பது போன்ற வேதனையைத் தோற்றுவிக்கிறது.
“யாரங்கே?”