உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகத்தியர் யார்? எங்கே?

107


தமிழ்நாட்டில் வழங்கும் கதைகள் வேடிக்கையாய் அமைந்துள்ளன.

முதற்சங்க நூல் அகத்தியம் எனக் குறிக்கின்றது இறையனார் களவியல் உரை. அச் சங்கத்தே திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும்' ஒருங்கிருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்ப. எனவே, அந்த வரலாற்றில் அகத்தியர் கடவுளர்களோடு சார்த்திப் பேசப் பெறுகின்றார். கடவுளர் தமிழ்நாட்டில் வந்து தங்கித் தமிழ் வளர்த்தனர் என்று பேசுவன யாவும் புராண மரபாய் அமைவனவேயன்றி, வரலாற்றுக்கோ ஆராய்ச்சிக்கோ ஏற்ற மரபாய் அமையமாட்டா. அப்படியே அவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தார்கள் எனக் கொள்ளினும், அது நம் நினைவுக்கு எட்டாத நெடுங்காலத்துக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக் கொள்ளத்தக்க ஒன்றாகும். மற்றும், தொல்காப்பியர் தம் ஆசிரியராய் வாழ்ந்த அகத்தியர் அக் காலத்திலேயே இருந்து, அன்றே—பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே—தமிழ் வளம் பெற்றதாய் இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளல் வேண்டும். இது வரலாற்றுக்குப் பொருந்தாத ஒன்று. எனவே, பொதிய மலையில் அகத்தியர் வாழ்ந்தார் எனக் கொள்ளினும், அவரைக் கடவுளர்களோடு சார்த்திப் பேசுதல் முறையன்று எனக் கூறி மேலே செல்லலாம்.[1]

இடைச்சங்க காலத்திலும் அகத்தியமும் தொல்காப்பியமும் இருந்தன என்பதைக் காண்கிறோம்; அத்தொல்காப்பியர்தம் ஆசிரியராகவே அகத்தியர் அமர்ந்து தமிழ் வளர்த்திருக்கின்றார். ஆயினும், தொல்காப்பியத்தின் ஒரு சூத்திரமும் கெடாத வகையில் நாம் அதை முழு நூலாகவே பெறுகின்றபோது அகத்தியத்தின் இரண்டொரு சூத்திரங்களையே நம்மால் பெற இயல்கின்றது.


  1. Agasthia in Tamil Land