தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
129
வெற்றி கொண்டோ, அல்லது நண்பு கொண்டோ வட நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் அக்காலத்து மன்னர்கள். என்றாலும், தமிழ் மொழிக்கு அக்காலத்தில் வேங்கடமே எல்லையாய் அமைந்துவிட்டது. அதற்கு அப்பாற்பட்ட பகுதிகள் யாவும் மொழிபெயர் தேயம்’ என்றே வழங்கப்பெறுகின்றன. எனவே, தொல்காப்பியர் காலத்தில் தெற்கே தமிழ்நாட்டு எல்லை விரிந்திருந்ததோ இல்லையோ என்று முடிவு செய்ய முடியாவிடினும், வடக்கே வேங்கடம் இன்றே போன்று தமிழ் மொழி வழங்கும் எல்லையாகவே இருந்தது. எனவேதான் பாயிரம் பாடிய பனம்பாரனார் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து எனத் தொடங்குகின்றார். வடக்கே வேங்கடம் இன்றும் அதே பெயருடன் விளங்குகின்றமையின், வேறுபாடு தோன்றவில்லை. எனினும், தென்குமரி ஆறா, மலையா, இன்றைய குமரிமுனையா என்பதே ஐயப்பாடு. உரையாசிரியர் யாவரும் யாறு என்றே கொள்கின்றனர். அரசஞ்சண்முகனார் அதை மலை என்கின்றார். அக்குமரி பற்றி வழங்கும் பழைய புறநானூற்றுப் பாடல்களும் அது எது என்பதைத் திட்டமாக அறுதியிடவில்லை; தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்’ (புறம். 6) எனவும், தென் குமரி வடபெருங்கல்’ (புறம். 17) எனவும் கூறுகின்றன. பின் வந்த காக்கை பாடினியாரும், இளங்கோவடிகளும் குமரிப் பெளவம்’ எனக் கடலாகவே குறிக்கின்றார்கள், எனவே, தொல்காப்பியர் காலத்து அது மலையாகவோ அல்லது ஆறாகவோ இருந்திருக்கலாம் எனக் கொள்வர் ஆராய்ச்சியாளர்.
தெய்வ வழிபாடு தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது எனக் கண்டோம். அதைப் பல வகையில் அவர் வற்புறுத்துகின்றார்.
‘காமப் பகுதி கடவுளும் வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.’
(புறத்திணை. 23)