உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

139


மாறுபட்ட போர்க்களத்தே நடுவுநிலையாளராயிருந்து, இன்னார் இனியார் என்னாது, உற்றார் அற்றார் என்னாது உதவிய பெருமை தமிழ் மன்னரைச் சார்ந்ததாகும். அக்காலத்து வாழ்ந்த பாண்டியர் மரபில் அருச்சுனன் பெண் கொண்டான் என்றும் கூறுவர். எனினும், தமிழர் தமக்கு வேண்டியவர் வேண்டாதார் என்று வேறுபாடு காட்டாது, அனைவருக்கும் போர்க்களத்தில் உதவினர் எனக் கொள்ள வேண்டும்.

இனி, இக் கருத்துக்குச் சிலர் மாறுபட்டு இந்த அடிகளுக்குப் புது உரை கற்பிக்கின்றனர். அது பொருந்துமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இதில் வரும் 'ஐவர்' என்னும் சொல் பாண்டவர்களைக் குறியாது. பாண்டியரைக் குறித்ததெனவும், பாண்டியருக்கும் பஞ்சபாண்டியர் என்ற பெயர் வழங்கி வந்ததெனவும் அறிஞர் கருதுகின்றனர். அந்த நிலையில் ஐந்து பாண்டியர் பரம்பரை பரம்பரையாய் நெடுங்காலம் பாண்டிநாட்டை ஆண்டவர் எனவும் குறிக்கின்றனர். ஒரே காலத்தில் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஐவர் பாண்டியர் ஆண்டனர் எனக் காட்டுகின்றனர். தலைமைப்பாண்டியன் மதுரையிலும், இளவரசன் கொற்கையிலும், பிறர் வெவ்வேறு இடங்களிலும் இருந்து ஆண்டனர் என்பர். இவற்றிற்கு ஆதாரங்கள் இல்லை. பின்னால், பதின்மூன்றாம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ, வாசபு போன்ற பிற நாட்டு யாத்திரிகர்கள் வந்த காலத்தில் நாட்டில் உண்டான குழப்பம் காரணமாக நாடு பலவகையில் துண்டாக்கப்பட்டுப் பாண்டி நாட்டை ஐவர் ஆண்டனர் என்பதை அவர்கள் காட்டும் குறிப்பின்வழிக் காண்கின்றோம் அவர்தம் வேறுபாடே, அவர்வழித் தமிழ்நாட்டில் மற்றவரை ஆணை செலுத்த வழி உண்டாக்கித் தந்தது. இந்தக் காலம் தவிர்த்துப் பாண்டிநாட்டில் ஐவர் பாண்டியர் சங்க காலத்தோ அதற்கு முன்னோ ஆண்டதாகக் குறிப்பு நாம் காணவில்லை. கொற்கையில் இளவரசன் ஆண்டான் என்பது உண்மை. அது சிலப்பதிகாரத்தாலும் தெரிகிறது.