பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வரலாற்றுக்கு முன்


என்பர். அவர்கள் கடைச்சங்க காலத்தவர் என்பதற்குச் சான்று எங்கே உள்ளது? அப்படியே அப் பெயர் கொண்ட மன்னன் ஒருவேளை கடைச்சங்க காலத்தில் இருந்ததாக வைத்துக்கொண்டாலும், அப்பெயருடனே அவருக்கு முன் அக்குடும்பத்தில் வேறு ஒருவரும் இல்லை என்று சொல்ல முடியுமா? வரலாற்றில் இந்த முறை எங்கெங்கும் காணும் ஒன்றல்லவா? சேரமான்கள் பலர் சங்ககாலத்தில் வருகின்றனர். இவனுடைய சோறு இட்ட சிறப்பைக் கருதியே இவன் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என வழங்கப்பெறுகின்றான். இவனுக்கு உரிய பாடல்களும் இல்லை. அதுபோன்று முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் இந்த ஒரே பாடலைத் தவிர வேறு பாடலும் பாடவில்லை; எனவே, இது காலத்தால் முந்திய பாடல் என்று கொள்வ தில் தவறு இல்லை. தொகுத்த புலவர் தமது கடவுள் வாழ்த்துக்குப் பின் காலத்தால் முந்தியதாகிய இப் பழம் பெரும் பாடலையே தேர்ந்தெடுத்திருப்பார் எனக் கொள்வது சிறந்ததன்றோ! இம்மன்னனை ஒத்த பேரும் புகழும் பெற்ற பழம்பெரு மன்னரைப் பற்றிய பாடல்களுட் சில அடுத்து வருவதும் எண்ணத்தக்கது

இந்த ஆசிரியர் பெயர் ‘முடிநாகராயர்’ என இராது என்றும், ‘முடிநாகரியர்’ என இருக்கும் என்றும் காட்டும் முறைபற்றி நாம் கவலை கொள்ளவேண்டா. எத்தனையோ பெயர்கள் காலப்போக்கில் சிதைவதும் கெடுவதும் உண்டு. இப்பெயர் அவற்றுள் ஒன்றா அல்லவா என்பது பற்றி இங்கே நாம் ஆராயத் தேவையில்லை. இரண்டும் பொருந்து வனவே! பலர் 'முடிநாகராயர்’ எனவே கொள்கின்றனர் என்ற முடிவோடு நாம் அமைவோம்.

இனி, இப்பாடல் பொருள் மாற்றம் காண்பதற்கு மற்றொரு காரணம் அக்காலத்தில் வடநாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் தொடர்பு இருந்திருக்குமா என்ற ஐயமாகலாம். ஆனால் வரலாற்று வழியும் இப்பாட்டின் வழியும் அது இயல்வதே என்று கொள்ளல் பொருந்தும். சிந்துவெளி