நந்தரும் மெளரியரும்
169
வந்த மோரியர் புதியராதலின், அவரை ‘வம்ப மோரியர்’ என்றார் புலவர். 'வம்பு’ என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் (பிங்கலம்) நிலையின்மை என்றும் (தொல்காப்பியம்) பொருள் உண்டு. தம் நண்பராகிய நந்தர்மேல் படை எடுத்து வந்தவரைப் புதியர் எனக் கூறியதன்றி, நிலையற்ற வாழ்வை உடையவர் என இழித்துரைத்தலும் இயல்வதேயாகும். நந்தர் தம்முடைய பெருஞ்செல்வத்தை -பாடலியில் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை - இப்புதிய மோரியருக்கு அஞ்சிக் கங்கைக் கரையில் மூடி மறைத்துவைத்தனர் என்பதை இரண்டாவது பாட்டு (265) நன்கு காட்டுகின்றது, நந்தர் பரம்பரையைப் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தி, அவர்தம் ஆட்சியையும் செல்வத்தையும் சந்திரகுப்தர் கைப்பற்றினார் என்னும் உண்மையை ஸ்மித்து அவர்கள் நன்கு காட்டியுள்ளார்கள்.[1] மேலும், அவர் அவர்தம் பாடலிபுத்திரம் இப்போதைய பாட்னா அன்று எனவும், அது அக்காலத்தில் சோன் (sonn) நதிக்கரையில் இருந்தது எனவும் காட்டுகின்றார்.[2] எனவே, நந்தர் செல்வ நிலையையும், அதை அழித்த மோரியரையும் நினைத்த மாமூலனார், ஒரே பாட்டில் இருவரையும் குறிக்கின்றார்; மோரியரைக் குறிக்கும் போது அவர்தம் தமிழ் நாட்டுப்படை எடுப்பு நினைவுக்கு வர, அதையும் விளக்கிக் காட்டிவிடுகின்றார். மெளரியர் மேலைக் கடற்கரை வழியாக மைசூர்ப் பகுதியிற் புகுந்து தமிழ் நாட்டு எல்லையில் போர் கருதி வந்தனர் என வரலாற்று ஆசிரியர் காட்டியதை மேலே கண்டோம். ஆனால், அவர்கள் வரக் காரணமாயிருந்தவர்களைக் காணமுடியவில்லையே! மாமூலனார் அந்த ஐயத்தை நன்றாக விளக்குகின்றார் தமது அகப்பாட்டிலே (251).