பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

25



மாகக் காட்ட முடியவில்லை. என்றாலும், அந்த நீண்ட நாட்களிலேதான் சிந்து சமவெளியிலிருந்து கங்கைக் கரைக்கும் அடுத்து மெள்ள மெள்ளத் தெற்கு நோக்கித் தமிழ்நாடு வரையிலும் ஆரியர்கள் போராலும் பிறவற்றாலும் தம் ஆணையைப் பரப்பிக்கொண்டு வந்தார்கள் என்பது தெரிகின்றது. அக்காலத்திலேதான் சம்ஸ்கிருதத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் எழுதப்பெற்றன. பாரதப் போர் ஏறக்குறைய, கி.மு. 1400ல் நடைபெற்றதென்பர். இராமாயணம் அதற்கு முந்தி என்பாரும் பிந்தி என்பாரும் உளர். இப் பாரத காலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால், பிந்தியது என்பதே அதற்குப் பொருத்தமானதாக அமையும். எப்படியும் அவர்கள் கங்கை சிந்துசமவெளி வந்த பிறகு, பரந்த இந்திய நாட்டைப் பற்றியும் அறிந்த பிறகேதான் அவை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றைப் பற்றி இதிகாச வரலாற்றுக் கதைகள் நூல் வடிவிலே நெடுங் காலத்துக்குப் பின்னரே வந்திருக்க வேண்டும். வேதத்தைப் போன்றே இவையும் பல காலம் கேள்வி வழியாகவே வந்திருக்கலாம். அன்றி, முதலிலேயே எழுதப்பெற்றனவாயினும், இன்று நாம் காண்பதற்கும் இவற்றின் முதல் எழுத்துக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்திருக்கவேண்டும்.

மற்றும் இக்காலத்திலேதான் வடவிந்தியா ‘ஆரியா வர்த்தம்’ என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும். ஐம்பத்தாறு தேசத்து அரசர் பற்றிய கதைகள் பல இக்காலத்தனவேயாகும். வடவிந்தியாவைப் பல வகையில் துண்டாடித் தத்தமக்குக் கிடைத்த வரையில் அவரவர் கைப்பற்றி ஆண்டிருக்கவேண்டும். இக்காலத்திலேதான் இந்த நாட்டுப் பழங்காலப் பல வகைப் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் பிற நல்லியல்புகளையும் வந்தவர் கைக்கொண்டு தம்மவை ஆக்கிக்கொண்டிருக்க வேண்டும். மற்றும் சிவன், திருமால், சத்தி போன்ற கடவுளரைக் கண்டு வழிபடும்