பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அணுவாகிய உலகில் நின்றுகொண்டு, கணக்கிட்டறிய முடியாத கால எல்லையில் ஒரு நொடியே நிற்கும் மனித இனத்தின்-வாழும் இன்றைய மனிதன், வரலாற்றை வரையறுக்க முடியாது என்பதை இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் நிறுவுகின்றன. சிறப்பாகப் பரந்த இந்தியத் துணைக் கண்டத்திலும், அதன் பகுதியாய் உள்ள தமிழகத்திலும் இந்தக் கருத்துக்கள் விளக்கம் பெறாவிட்டாலும், பன்னெடுங் காலமாக நாட்டில் நிலவிக்கொண்டே வருகின்றன.

இந்திய நாட்டு வரலாற்றின் எல்லையை ஆராயத் தொடங்கின், கானும் வரலாற்று மூலங்கள் வழி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மால் செல்ல முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அதற்கு முன் ஒன்றுமே இல்லாத அநாகரிக நாடாய் இது இருந்து, இதன்மேல் மையல் கொண்டு அலெக்ஸாந்தர் வந்தார் என்று ஆராய்ந்து, அதிலிருந்து வரலாற்றைக் கணிக்க முடியுமோ! அலெக்ஸாந்தர் படையெடுப்பே இன்று இந்திய நாட்டு வரலாற்று எல்லைக் கல்லாய் அமைகின்றது[1]. தமிழ் நாடாகிய தென்னகத்தைப் பொறுத்தவரையில் தொல்காப்பியர் காலத்தை அறுதியிட முடியவில்லை எனச் சிலர் நினைத்தாலும், அதன் காலமாகிய சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால எல்லையே வரலாற்று எல்லையாகின்றது. இன்னும் சற்று முன் சென்றால் 5000 ஆண்டுகள் வரை தெளிவற்ற வரலாற்றை ஓரளவு காண இயலும். “அதற்கு முன் என்ன?” என்னும் கேள்விக்கு வருங்கால ஆராய்ச்சிகளே பதில் சொல்ல வேண்டும்.

தெளிந்த வரலாற்றுக் கால எல்லையாகிய தமிழ்நாட்டுக் கடைச்சங்க கால எல்லையிலும், வடநாட்டு வரலாற்றை வரையறுத்துக் காட்டும் அசோகர் கால எல்லையிலும் கீழ் வரம்பை அறுதியிட்டுக்கொண்டு, தெளிவு பெறாத 5000


  1. Indla's Past, by A. A. Macdonell, p. 9