பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

41


யழகு காண்போம் என்று எண்ணிப், பழமைமுன் கூத்தாடும் தமிழர், ஆரிய ஆதிக்கத்திலே சிக்கிவிடுகின்றனர். ஒரு சிறு சம்பவம். புத்துலகப் பற்றுக் கொண்ட ஒரு திருவாளரின் திருமனையிலே நடை பெற்றது, கற்பனையல்ல ; ஆனால் கண்ணியமான முறைக்காகவேண்டி, பேருக்கு முகமூடியிட்டிருக்கிறேன், உமது மன்னிப்பை எதிர்பார்த்து.

"வாருங்கோ! நேற்றுமாலை நெடுநேரம்வரை காணோம், எங்கே போயிருந்தீர்கள்?" கேட்டார் புத்துலகப் பற்றுடையார். பழமையாளர் சொன்னார் "பரதநாட்டியம் காணச்சென்றேன். பரமானந்தம் கொண்டேன். பாத்திரம் முதல்தரமானது. அபிநயம் அபாரம். கீதம், லலிதமாக இருந்தது" என்று. புத்துலகப் பிரியருக்கு நடனங் காண ஆவல் பிறந்தது, கலைக்காகத்தான்! கண்டார். "கண்டவுடன் எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வா" என்ற சகானா பாட்டுக்கு அபிநயம் அழகுற நடந்தது. அம்மையும் கலைக்காகத்தான் அதனை நடத்தினார். இருவரும் தங்களை அறியாமல் கட்டிலறை நோக்கி நடந்தனர், அதுவேறு விஷயம். பிறகு, நர்த்தனத் தத்துவந்தான் நடராஜர், என்று புத்துலகப்பிரியருக்குப் பழமையாளர் புகன்றார். விக்ரகம் வாங்கப்பட்டது, அந்தத் தூக்கிநின்றாடும் காட்சியிலே, கூத்தின் விளக்கங்காணத்தான், வேறு எதற்குமல்ல; காலையிலே காண்பார், கலையழகை எண்ணுவார், கூத்தனின் சிலை மூலம். பிறகு பழமையாளர், விக்ரகத்தை வீணாகப் பாழாக்குகிறீர். நீராட்டாது விட்டீரேல், அது பாசி ஏறிப் பாழ்படுமே" என்றுரைத்தார். ஆமென்றார்