பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருகிறோம். உங்களுடன் பேசிப்பொழுது போக்குவதே இனிமை நிறைந்த அனுபவம்தான் என்று சுந்தரமூர்த்தி சொன்னார். செவிக்கு இன்பம் அவருக்கு கண்களுக்கு இன்பம் காத்திருக்கும் எனக்காக!' என்று சிவம் நினைத்தான். தான் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட அவன் முட்டாளா என்ன? சிவப்பிரகாசத்திற்கு, பொழுது போகவில்லை என்ற கவலையே கிடையாது. போக்குவதற்குப் பொழுது நிறையவே இருந்தது அவன் வசத்தில், அவன் வேலை பார்த்துவந்த ஸ்தாபனத்தில் ஆளைக் கொல்லும் வேலை’ எதுவும் இல்லை. உடம்பிலே பிடிக்காமல், ஹாயாக இருந்து ஏதோ வேலை செய்து எப்படியோ எட்டு மணி நேரத்தைப் போக்கிவிட்டு, கணிசமான ஒரு தொகையை மாதம்தோறும் சம்பளம் என்று பெற்றுக்கொள்வதற்குரிய வசதி அவனுக்கு இருந்தது. ஆகையினால், எப்பொழுதாவது ரத்னசாமியின் வீட்டுக்குப் போய் ஒன்றிரண்டு மணி நேரத்தைக் கொலை செய்து விட்டு வருவது அவனுக்குப் பெரிய சிரமமாகவோ, கால நஷ்டமாகவோ தோன்றவில்லை. மேலும், ரத்னசாமி வீட்டின் ரத்தினங்கள் அவனுக்கு உற்சாகம் அளிக்கும் இனிமைகளாக விளங்கினார்கள். அவர்களும் அபூர்வமாக எப்பொழுதேனும் சம்பாஷணையில் கலந்து கொண்டார்கள். அவர்களில் மூத்தவளான சாந்தாவை அவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. அவள் இனிய ரசிகை, நல்ல புத்திசாலி என்று அவன் மனம் அடிக்கடி ஸ்ர்டிபிகேட் கொடுத்து வந்தது. சிவப்பிரகாசம் அவனுடைய பண்பாட்டுக்கு ஏற்பவே நடந்து வந்தான். இதே ரீதியில் போனால் என்ன நடக்கும்? என்று அவன் எண்ணிப் பார்க்கவில்லை. இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே!’ என்று அவன் கற்பனை செய்தது மில்லை. ஆயினும், காலம் சும்மா இருந்துவிடவில்லை.