பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூப்போன்ற கைகள், பூப் போன்ற கால்கள். பூப் போன்ற கன்னங்கள். குவிந்த மொக்கு போன்ற உதடுகள், புஷ்பக் குவியல் போன்ற சின்னஞ் சிறு உடல். அதன் உள்ளமும் பூப்போன்று தான் இருக்கவேண்டும். கன்னங்கரிய விழிகளிலே ஒளி சுடரிட, முகம் மலர குழந்தை சிரிக்கிற போது, இதற்கு இணையான காட்சி இந்த உலகத்திலேயே வேறு எதுவுமே கிடையாது என்று தான் தோன்றுகிறது. ஆனால், குழந்தை எப்பொழுதும் அதே நிலையில் இருப்பதில்லையே. எதையாவது எண்ணிக் கொண்டு முரண்டு பண்ணி அழுகிறபோது, அது வெறும் குழந்தையாகவா தோற்றம் அளிக்கிறது? குரங்காகவும் கோட்டானாகவும் சனியாகவும் தரித்திரமாகவும் இன்னும் என்னென்ன வெல்லாமோ ஆகவும் காட்சி தருகிறது. அப்படி எண்ணும் படி செய்து விடுகிறதே அது ! அவ்வேளையில் இச் சின்னஞ்சிறிய உடலினுள் இத்தகைய இரும்புத் தன்மை எப்படிக் குடிபுகுந்தது? இவ்வளவு அடம் எவ்வாறு உறைந்து கிடந்தது? இதனுடைய மென்மை சுபாவம் என்னவாயிற்று' என்று அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.) இவ்விதம் பார்வதி எண்ண நேர்ந்தது அஞ்சு புத்து தடவைகள் அல்ல; நூற்றுக்கணக்கான முறைகளாகும். அவளுடைய குழந்தை வளர்ந்து மூன்றரை வயசை எட்டிப் பிடித்துவிட்டது. அந்தக் கால அளவினுள் அது படுத்திய பாட்டுக்கு ஒர் அளவு தான் உண்டா: "அன்பே, அமுதே; என் கண்ணே! என் ராசா” என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்து போன தாய், சே! இது என்ன பிள்ளையாகவா வருது: பிசாசு மாதிரிப் பிச்சுப் பிடுங்குதே!