பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 127

குளங்களில் அலைபாயும் நீரோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு ஒவ்வொரு தடவையும் வறட்சியையே படம் பிடித்துக் காட்டியது. இப்போதும் வறட்சி அதிகரித்தே தென்பட்டது. இந்த வட்டாரத்தில் நெடுக மழை பெய்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.

22 சனியன்று அருணாவோடு எட்டயபுரம் போனேன். ஒரு பஸ் ஏறி குறுக்குச் சாலையில் இறங்கி, வேறு ரஸ்தாவில் கோவில்பட்டி போகிற பஸ்ஸில் ஏறிப் போகவேண்டும். இந்த வழியில் தான் எப்போதும் வென்றான் (எப்பகொண்டான்) ஊர் வருகிறது.

எட்டயபுரம் என்றால் எப்போதும் என் நினைவில் எழுவது ஒரு ரோடு, திருப்பத்தில் ஒரு குளம். நீர் நிறைந்த குளத்தில் நிறைய நிறையப் பூத்துச் சிரித்த சிவப்பு அல்லிகள். எனது 5வயது முடிந்து 6வது வயதில், கோவில்பட்டியிலிருந்து வில்வண்டியில் வந்தபோது பளிச்செனத் தெரிந்த அந்தக் காட்சிகுளம் நிறைய சிவப்பு அல்லிப் பூக்கள் பூத்திருப்பதை முதல் முறையாகப் பார்த்ததால் - மனசில் இளமையாய் புதுமையாய் பதிந்துள்ளது. எட்டயபுரத்துக்குப் போனால், அந்தக் குளத்தில் இப்போது அல்லி பூத்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு என்றும் உண்டு. இப்போது தான் அந்த ஊருக்குப் போகமுடிந்தது.

எட்டயபுரம் ஊர் பெரிசுதான். கடைகள், ஹைஸ்கூல், பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன், பாரதி மண்டபம், முத்துசாமி தீட்சிதர் சமாதி, பாரதி பிறந்த வீடு எல்லாம் இருக்கின்றன. கோவில்பட்டியிலிருந்து வருகிற ரஸ்தா திரும்புகிற இடத்தில் அட்டைக்குளம் பெரிசாக இருக்கிறது. ஆனால் வறண்டு கிடக்கிறது.

'இதில் தண்ணிர் கிடக்கிற காலத்தில் நிறைய, ரோடைத் தொட்டுக்கொண்டு, அலைகள் படிந்து நன்றாக இருக்கும் என்று அருணா சொன்னார். என் நினைவின் தேடலை நான் அவரிடம் சொல்லவில்லை:

பாரதி வீட்டின் இல்லக் காப்பாளர் ஆக இளசை மணியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களாச்சு வீடு வெறுமனே தான் இருக்கிறது. அருணா எழுதிய கவிதைகள் (பாரதி பாடல்கள்) கொண்ட அட்டைகள், படங்கள் பல இடங்களிலும் தொங்கவிடப் பட்டுள்ளன. அவை இல்லாவிட்டால் பாரதிக்கும் அந்த வீட்டுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது. பாரதி படங்கள் 2 உள்ளன. ஒரு வேல்கம்பு, தடிகள், கண்ணன் பொம்மை (பாரதியார் உபயோகித்தவை என்று) ஒரு அலமாரி அருகில் உள்ளன. சில புத்தகங்கள் (பாரதி பாடல்கள், கட்டுரைகள் வகையரா, பாரதி பற்றி சிலர் எழுதியவை) அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மத்தியானம் இளசை மணியன் வீட்டில் சாப்பாடு. பாயசத்தோடு