பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி 161

சூரியன் பிள்ளை பஞ்சவர்ணத்தம்மாளை அழைத்து வந்து அந்த வீட்டில் விடுவதற்கு முந்தி, பாக்கியம் என்றொருத்தி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருத்தி தான் இரண்டு மாத காலம் வேலை செய்தவள்.

- இந்தப் பஞ்சவர்ணம் வேலையிலே சேர்ந்து ரெண்டு மாசம் ஆகியிருக்குமா... ஊம். இருக்காதுன்னுதான் தோணுது. ஆனா ஒரு மாசத்துக்கு மேலே ஆயிட்டுதுன்னு நினைக்கிறேன்.

பஞ்சவர்ணத்தம்மாள் இந்த வீட்டில் ஒட்டிக்கொள்வாள் என்றுதான் சூரியன் பிள்ளை நினைத்திருந்தார். சாப்டாட்டுக்கே இல்லாது, சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள். இங்கே வீட்டோடு சாப்பிட்டுக் கொண்டு, இருக்கிற வேலைகளைச் செய்தவாறு செளகரியமாக இருக்கலாம். வேலைகளும் அதிகமாகவோ கடுமையாகவோ இரா. மாதக் கடைசியில் சம்பளம் என்று முப்பது ரூபாய் கிடைக்கும். பஞ்ச நிலையிலிருந்த பஞ்சவர்ணத் தம்மாளுக்கு இது சுகவாசமாக அல்லவா தோன்றும் என்று அவர் எண்ணினார்.

ஆனால் அவள் என்னவோ தன் சுயவர்ணத்தைக் காட்டி விட்டாளாமே?

- அந்த வீட்டின் ராசியோ, அல்லது வந்து சேரும் வேலைக்காரிகளின் ராசிதானோ, ஒருத்தி கூட நிலைத்திருப்பதில்லையே! வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரியைப் பிடிக்காமல் போய் விடும். இல்லாவிட்டால், வேலைக்காரிக்கு அந்த இடம் ஒத்து வராமல் போய்விடும்! எப்படியானாலும், சிவராமன் சாருக்குத் தான் வேறு ஆள் தேட வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. இது பெரிய தலைவலி தான். -

ஒவ்வொரு வேலைக்காரியைப் பற்றியும் சிவராமன் சூரியன் பிள்ளையிடம் சொல்லத் தவறியதில்லை. தனது மனக்குறையை யாரிடமாவது சொல்லித் தீர்த்தால் ஏதோ ஆறுதல் ஏற்படுமே! 'சும்மா தெரிந்தவர்' என்ற நிலையிலிருந்து, 'சிநேகிதர்' என்ற தகுதிக்கு உயர்ந்திருந்த சூரியன் பிள்ளையிடம் சொல்லாமல் அவர் வேறு யாரிடம் கூறுவார்?

ஆகவே, எல்லா வேலைக்காரிகளைப் பற்றியும் அவருக்குத் தெரிந்துதானிருந்தது.

இரண்டு மாத காலம் வேலை பார்த்து 'ஒரு ரெக்கார்டு’ ஏற்படுத்தி விட்ட பாக்கியம் நன்றாகத்தான் நடந்து வந்தாள். அவ்வீட்டிலேயே அதிக நாள் நீடித்து விட்ட தெம்பிலோ என்னவோ, வரவர அவள் அதிக உரிமைகள் எடுத்துக்கொள்ளலானாள். தான் இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே, குழந்தைகளை