பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 வல்லிக்கண்ணன் கதைகள்

சிவகாமிக்கு நேர்முரணான ஒருத்தி ஒரு சமயம் அவ்வீட்டில் வேலை பார்த்தாள். பேரு ராசம்மாளோ என்னவோ. அவள் தன் வயிற்றுக்குச் சரியாகச் சாப்பிடமாட்டாள். தனக்கு உரியதை எடுத்து மூடிவைத்து விடுவாள். அப்படியே மறந்தாலும் மறந்து போவாள். 'ராசம், சாப்பிட்டையா?' 'சாப்பிடலியா ராசம்மா?' 'நேரமாச்சு, சாப்பிடு. வேண்டியதைச் சாப்பிடு!' இப்படி அவளை அடிக்கடி 'தாங்கி' உபசரித்தாலும், அவளுக்கா மனம் இருந்தால்தான் சாப்பிடுவாள்: வெற்றிலை புகையிலை மட்டும் அடிக்கொரு தடவை வாயில் திணிக்கப்படும். அதனால் தான் பசி மந்திச்சுப் போகுது! சாப்பாடு வேண்டிருக்கலே’ என்று சிவராமன் குறிப்பிடுவார்.

அவள் சுத்தமாகவும் இருக்க மாட்டாள். மூக்கைச் சிந்தி, சுவர் மீது விரலைத் துடைப்பாள். கால் கைகளை நன்றாகக் கழுவ மாட்டாள். 'தினசரி குளிக்க வேண்டியிருக்குதே' என்று ரொம்பவும் சங்கடப்படுவாள்.

அவளுடைய 'அசுத்த மோகம்' வீட்டம்மாளுக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரமே போ அம்மா!' என்று வழி அனுப்பி வைத்தாள்.

ராசம்மாளுக்குப் பிறகு வந்த சுந்தரம் சுத்த மோகியும் சிங்காரப் பிரியையுமாக இருந்த காரணத்தினால் வெளியேற்றப் பட்டாள். அவளுக்கு முப்பது - முப்பத்தைந்து வயது இருக்கும். ஒல்லியாய், கரிக்கட்டையாய், கன்னம் ஒட்டிப் போய்த்தான் இருந்தாள். அவள் மனசில் 'நாம ரொம்ப அழகு' என்ற எண்ணம் இருந்திருக்கும். அடிக்கடி கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொள்வது அவளது பொழுது போக்குகளில் ஒன்று. அதே மாதிரி, தினசரி மூன்று நான்கு தடவைகள் முகம் கழுவி, பவுடரை தாராளமாகப் பூசி, பொட்டிட்டு, தலையைச் சீவிக் கொள்வதிலும் சிரத்தை காட்டுவாள். காலையில் அடுப்புச் சோலி முடிந்ததும் இப்படிச் சிங்காரித்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போவாள். மத்தியானச் சமையல் ஆனதும், முகம் கழுவிப் பவுடர் தடவிக் கொள்வாள். அதே மாதிரிச் சாயங்காலமும், காலையிலும் மாலையிலும் குளிப்பாள். வாசனை சோப்பு இல்லாமல் குளிக்க மாட்டாள்.

சிவராமனின் புத்தக அலமாரியை, மேஜையை எல்லாம் கண்ணோட்டம் விட்டாள் சுந்தரம். 'என்ன புத்தகம் இதெல்லாம்! மர்மக் கதை, துப்பறியும் நாவல், அது மாதிரி எதுவுமே இல்லையே? சினிமாப் பத்திரிகை ஒன்றுகூட வாங்குவதில்லையா? அழகழகாப் படங்கள் போட்ட பத்திரிகைகள் எத்தனையோ வருதே - நீங்க எதுவுமே வாங்குறதில்லையா? என்று விசாரித்தாள்.