பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி 163

என்னென்னவோ சொன்னாள். வந்த ஏழாவது நாளே, 'நான் மகனைப் பார்த்துப் பேசிவிட்டு வாறேன்’ என்று பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். போனவள் அப்புறம் வரவேயில்லை.

அவள் இருந்த இடத்துக்கு பாக்கியம் வந்து சேர்ந்தாள். பெரியம்மாதான் விலாசம் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள். அந்த மட்டுக்கு அவள் பரவாயில்லே!

ஒரு சமயம் அகிலாண்டம் என்றொருத்தி சிவராமன் சார் விட்டில் வேலை பார்த்தாள். வாயாடி. யாராவது ஒரு பேச்சு சொன்னால், அவள் பதிலுக்கு ஒன்பது பேசுவாள். வேலைகளைக் குறைவின்றிச் செய்தாள். ஆனால், வந்த ஐந்தாம் நாளே அவளுக்கு அலுத்து விட்டது. ‘இதென்ன் வீடு: அக்கம் பக்கத்திலே வீடுகளே இல்லாமல்! பேச்சுத் துணைக்கு இங்கே யாருமே இல்லியே. வேலை செய்து முடிச்சப்புறம் கொட்டு கொட்டுனு முழிச்சுக்கிட்டிருக்க வேண்டியிருக்கு. இல்லைன்னு சொன்னா, சுருண்டு முடங்கிப் படுத்துக் கிடக்கணும். ஒருத்தி எவ்வளவு நேரம் தான் தூங்குவா? பேசக் கொள்ள அண்டை அசலிலே ஆளுக இருந்தால் அல்லவா கெதியா இருக்கும்? இப்ப அட்டுப் புடிச்ச மாதிரி இருக்கு. இப்படி ஒரு மாசம் இருந்தால் எனக்குப் பைத்தியமே புடிச்சிடும்!’ என்று சொல்லி விட்டுப் போய் சேர்ந்தாள்.

சிவகாமி என்று ஒரு வேலைக்காரி இருந்தாள். சரியான சாப்பாட்டுராமி. முதலில் தனக்கு திருப்தியாய் பார்த்துக் கொள்ளுவாள். அப்புறம் தான் குழந்தைகளுக்கும், வீட்டு ஐயாவுக்கும் அம்மாவுக்கும். காப்பி தனக்கென்று 'ஸ்பெஷலா, ஸ்ட்ராங்கா தயார் பண்ணிக் கொள்வாள். அதுவும் அடிக்கடி வேண்டும். தோசை சாப்பிடும் போது ஒவ்வொரு தோசைக்கும் நிறையவே எண்ணெய் ஊற்றிக் கொள்வாள். நெய்யும் எடுத்துக் கொள்வாள். ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவற்றை சும்மாவே கரண்டியால் அள்ளி வாயில் போட்டுச் சுவைத்து மகிழ்வாள். நெய்யையும் சீனியையும் கலந்து தின்பதில் அவளுக்கு விசேஷப் பிரியம் இருந்தது. .

அவள் வந்து சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. வழக்கம் இல்லாத வழக்கமாக, அவ்வீட்டில் சாமான்கள் ஏகத்தாறாகக் காலியாகி விட்டன. நெய்யும் எண்ணெயும், சீனியும் பிறவும் அதிகம் வாங்க நேரிட்டது. இவளை வைத்துக் கொண்டு வேலை வாங்கினால், நம்ம வருமானத்துக்குள்ளே குடும்பம் நடத்த முடியாது; கடனுக்கு மேல் கடன் தான் வாங்க வேண்டியதாகும் என்று சிவராமன் உணர்ந்தார். சிவகாமி வெளியேற நேர்ந்தது.