பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் வெளுக்க...

15

அம்மா பர்வதம் இனிப்பு வகைகளும் முறுக்கு சீடை தினுசுகளும் தயாரித்துக் கொண்டு, மலர்ந்த முகத்தோடு மகளைப் பார்க்கப் போனாள். மறுநாளே 'கொண்டை முடிந்து தொங்கப் போட்டது போல்' மூஞ்சியை 'உம்'மென்று வைத்துக் கொண்டு திரும்பி வந்தாள். அவளுக்குப் புலம்புவதற்குப் புதிய விஷயங்கள் கூடைகூடையாய் கிடைத்திருந்தன...

கமலம் அங்கே சந்தோஷமாக இல்லை. மாமியார்காரி பெரிய தாடகை. மருமகளைப் படாதபாடு படுத்துகிறாள். மாப்பிள்ளைப் பையன் அம்மாப்பிள்ளை ஆக இருக்கிறான். நாம எவ்வளவோ செய்திருந்தும், அவங்களுக்குத் திருப்தி இல்லே... குறைகூறி, குத்திக்காட்டிக்கிட்டே இருக்கிறாங்களாம். கமலம் அந்த வீட்டிலே சம்பளம் இல்லாத வேலைக்காரியாகத்தான் இருக்கிறாள். ஏகப்பட்ட வேலைகள். அப்படி வேலை செய்தும் நல்ல பெயர் இல்லே...

இந்த ரீதியில் பலப்பல சொன்னாள்.

கொல்லன் உலைத் துருத்தியைப் போல சிவசிதம்பரத்தின் நெஞ்சு அனல் பெருமூச்சை வெளியே தள்ளியது.

"நாமும் எவ்வளவோ பிரயாசைப்பட்டு, நல்ல இடமாக வலை போட்டு தேடினோம். கமலம் பெரியமனுஷி ஆகிப் பதினஞ்சு வருசம் ஆயிட்டுதே... இன்னும் வீட்டோடு வைத்திருப்பது நல்லாயில்லை என்று, கிடைத்த இடத்தை முடிச்சோம். பையன் சுமாராப் படிச்சிருக்கான். தனியார் நிறுவனம் ஒன்றிலே சாதாரண வேலை ஒண்ணு பார்க்கிறான். பெரியதனங்கள் பண்ணமாட்டான், பேராசைப்பட மாட்டான் என்று நினைத்தோம். அவனும் இந்த லெச்சணத்திலேதான். இருக்கிறான். என்ன பண்ண முடியும்? கமலத்தின் தலையெழுத்து இவ்வளவுதான்னு நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...'

சிவசிதம்பரம் இப்படி தனக்கும், தன் மனைவிக்கும் ஆறுதல் கூறிக் கொண்டார்.

ஒருநாள் - கமலத்துக்குக் கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் கழிந்தபோது - சிவசிதம்பரம் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஈலிச்சேரில் சாய்ந்திருந்த சமயம் வாசல் கதவு தட்டப்பட்டது.

'யாரது?’ என்று கேட்டவாறு எழுந்துபோய், கதவைத் திறந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அங்கே கமலம் கையில் ஒரு பையுடன் நின்றாள்.