பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 வல்லிக்கண்ணன் கதைகள்

போல் அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டு விலகிப் போவார்கள்.

இந்த ஊரிலும் அப்படித்தான் நடந்தது. இதன் மூலமும் எனக்குப் பிடித்தமான அமைதியான சுற்றுச் சார்பு படிந்துவிட்டது.

இப்படி மனசுக்குப் பிடித்தமான முறையில் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தபோதுதான் 'திடீர் விபத்து' மாதிரி நிகழ்ச்சிகள் குறுக்கிட்டன.

பக்கத்து பங்களாக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஆட்கள் வருவதும் போவதுமாய்ச் சதா ஒரே பரபரப்பு. கூச்சல், குதிப்பு, சிரிப்பாணி எப்போது எழும் என்று சொல்லமுடியாத நிலை.

ஒரு நாள் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். தோட்டத்தில் பாட்டுக் குரல் கேட்டது.

'ஐயா சிறுபெண், ஏழை என்பால், இரக்கம் வராதா - தெய்வம் தின்னச் சோறு தராதா?

என்று பழங்கால சினிமாப் பாடல் ஒன்றை இனிமையாக இசைத்தது ஒரு குரல்.

அது என்னை வெளியே இழுத்தது.

பெரிய பெண் ஒருத்தி பாடிக்கொண்டிருந்தாள். சிறுமி ஒருத்தி உரிய முறையில் ஆடிக்கொண்டிருந்தாள்.

எனக்குச் சிரிப்பு வந்தது.

தற்செயலாக அக்காள் என்னைக் கவனித்து விட்டாள். "ஏட்டி, போதும் நிறுத்து, அந்த வீட்டுக்காரர் பார்க்கிறார்' என்று எச்சரித்தாள். -

“பார்த்தால் பார்க்கட்டுமே!" என்று அலட்சியமாகக் கூறித் திரும்பிய சின்னப் பெண் என்னைக் கூர்மையாகக் கவனித்தாள். "ஏன் சிரிக்கிறீங்க?" என்று கேட்டாள்.

‘'சிரிப்பு வந்தது. சிரித்தேன்.”

அவள் வெடுக்கென்று கேட்டாள்: "ஏன் சிரிப்பு வருதுன்னு கேட்கேன்?"

“சிரிக்கக் கூடாதா?" என்றேன்.

'இல்லை. கேலியாச் சிரிக்கும்படி என் ஆட்டத்திலே என்ன கண்டிங்கன்னு கேட்கேன்!”

அவள் இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு தலை நிமிர்ந்து நின்று, கண்டிப்பான விசாரணையில் ஈடுபட்டது ரசிக்க வேண்டியது காட்சியாக இருந்தது.