பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்கொன்றை பூக்கும்போது... 169

தொங்க விட்டுக்கொண்டிருக்கும்; இதர காலங்களில் இலைகளோடு வெறும் மரமாய் நிற்கும் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.

இந்த மரம் என் உள்ளத்தில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டதற்கு இதனுடைய இந்தத் தனித் தன்மை மட்டுமே காரணம் அல்ல.

நாகரிக நகரங்களிலும், பேரூர்களிலும், சில சிற்றுார்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி, அலுப்புற்று, அமைதியற்று. சும்மா சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த ஊர் மிகுதியும் பிடித்து விட்டது. இது 'பட்டிக்காடு'மில்லை; 'பட்டணக்கரை'யும் இல்லை. அமைதியாய்நாளோட்ட ஆசைப்படுகிறவர்களுக்கு ஏற்ற அழகான ஊர். இங்கேயே தங்கிவிடலாமே என்றது என் மனம்.

வசதியான ஒருவீடும் கிடைத்தது. 'சிறுகுடில்' என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். பலவித மரங்களும் குளுமை தந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அது ஒரு ஆசிரமம் போல் இனிமையும் இதமும் தருவதாய் அமைந்துள்ளது. அதை ஒட்டி ஒரு 'பங்களா' அதைச் சுற்றிலும் பெரிய தோட்டம். அங்குதான் இந்தப் பொன்கொன்றை மரம் நிற்கிறது.

சிறு வீடும் சூழ்நிலையும் எனக்குப் பிடித்து விட்டதால் அதையே என் இருப்பிடமாகக் கொண்டேன் நான்.

பக்கத்துப் பெரிய வீடு எப்போதும் பூட்டியே கிடந்தது. அந்த வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு ஒன்றுபோல் தான். ஆகவே அதைப் பற்றி அறிந்துகொள்ள நான் அக்கறை காட்டவில்லை. -

பொதுவாக யாரைக் குறித்தும் தெரிந்து கொள்ள நான் சிரத்தை கொள்வது இல்லை. என்னையும் எனது புத்தகங்களையும் எனது விந்தைக் குணங்களையும் விசித்திரப் போக்குகளையும் தனிமையாக விட்டு விட்டு மற்றவர்கள் அவரவர் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தால் நல்லது என்று எண்ணி ஒதுங்கி வாழும் பிராணி நான்.

அநேகமாக யாரும் என் வழிக்கு வருவதில்லை. சதா புத்தகங்களைக் 'கட்டி மாரடித்துக்கொண்டு’, எதிலும் கலந்து கொள்ளாமலும் எவரிடமும் பேசிப் பழகாமலும் எப்படியோ நாளோட்டுகிற ஒரு நபரிடத்தில் மற்றவர்கள் என்ன சுவாரசியத்தைக் கண்டுவிட முடியும்? முதலில், யாரோ என்னவோ என்று அறியும் அவாவுடன் திரிவார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்துகொண்டதும், தத்தம் இஷ்டம்