பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 வல்லிக்கண்ணன் கதைகள்

விஷயங்கள்! இந்த பருவத்தில் பெண் பெரியமனுஷியும் இல்லை; சின்னப்பிள்ளையும் இல்லை. என்றாலும் பெரிய மனுஷிக்கு உரிய தோரணைகளும் எண்ணங்களும் ஆசைகளும் அவளிடம் தோன்றி விடுகின்றன. அதே சமயம், சிறுபிள்ளைத் தனமும் அறியாச் சுபாவமும் அவள் செயலில் வெளிப்படுகின்றன. தெரியாத்தனத்தோடும், அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடும் நடந்து கொள்கிற அவளிடம் 'தாம் பெரியவள், நமக்கு எல்லாம் தெரியும்' என்கிற ஒரு பெரியதனம் படிந்து, அவள் பேச்சில் சதா ஒலி செய்து கொண்டிருக்கும்.

இந்தப் பெண்ணும் அப்படித்தான் விளங்கினாள். அவள் இஷடத்துக்கு என் அறைக்குள் வந்தாள். சாமான்களைத் துழாவினாள். புத்தகங்களை உலைத்து, தாறுமாறாகப் போட்டாள். பெரிய தொல்லையாகவும், தொந்தரவாகவும் மாறிவிட்டாள் சில நாட்களிலே, அவள் மீது எனக்கு எரிச்சலும், சிறு வெறுப்பும் ஏற்பட்டது என்றாலும் அவளது புத்திசாலித் தனமான பேச்சும், குறும்புத்தனமும், விளையாட்டு சுபாவமும் எனக்கு பிடித்தனவாகி விட்டன.

ஒரு சமயம். 'உன் பேர் என்ன?’ என்று அவளிடம் கேட்டேன்.

'இன்னும் உங்களுக்குத் தெரியாது? ஐயே!' என்றாள். 'என்பேரு நெடுக முழங்குதே!' என்று பெருமையோடு சொன்னாள். 'இந்தத் தெருக் குரங்குக வாய்வலிக்க ஒரு பாட்டுப் பாடுதே, அது என்னைப் பத்திதான்!'

'"என் காதில் விழவில்லையே!”

"நீங்க என்ன செவிடா?”

"இல்லை. நான் படிக்கிறபோது, வேறு எதையும் கவனிப்பதில்லை" என்றேன்.

"நீங்க ஏன் படித்துக்கொண்டே இருக்கீங்க?" என்று உடனே கேட்டாள் அவள். எத்தனையோ பேர் கேட்டுவிட்ட வழக்கமான கேள்வி.

"சும்மாதான்" என்று சொல்லிவைத்தேன்.

“சுமந்துக்கிட்டே படிக்கப்படாது?... சும்மாதானாம்!”

"ஹூம்! மக்கிப்போன ஹாஸ்யம்" என்றேன்.

"உங்க மூஞ்சி!” என்று கத்தினாள் அவள்.

"அது எப்படியும் இருக்கட்டும். உன் பேரு என்ன, அதைச் சொல்லலியே?’’

"தெருப் பிள்ளைகள் கூப்பாடு போடுதே -