பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கரைப் பச்சை 179

'ஒழுங்கு முறை தவறாத அன்றாட நியதிகள். ஓட்டல் சாப்பாடு. லாட்ஜில் வாசம். பொழுது போக்குவதற்குப் படிப்பு. ஊர் சுற்றல் - என்னவோ இயந்திர ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை!' என்று அவர் உள்ளம் அடிக்கடி அலுத்துக் கொள்வதும் ஒரு வழக்கமாகிவிட்டது.

இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, புன்னை வனம் இப்படியா இருந்தார்? எவ்வளவு தன்னம்பிக்கை, உற்சாகம்! எத்தகைய உணர்ச்சிகளின், கொள்கைப் பற்றின், லட்சிய ஆவேசத்தின் உயிர் உருவமாகத் திகழ்ந்தார் அவ்ர் அந்த நாட்களிலே! அவரைக் கண்டு பேச வந்தவர்கள் அவரிடமிருந்து நம்பிக்கை ஒளியும் உற்சாகப் பெருக்கும் பெற்றுச் சென்றார்கள். அவரை 'முன் மாதிரி'யாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைப்போம் என்று கூட ஒரு சிலர் துணிந்ததும் உண்டு. -

ஆனால் கால வேகத்திலே, வாழ்க்கை நதியின் சுழிப்பில் இழுபட்டு, அவர்கள் பலரும் எங்கெங்கோ எப்படி எப்படியோ ஆழ்ந்துவிட்டார்கள். புன்னைவனம் மட்டும் கம்பீரமாக, மிடுக்காக, மகிழ்ச்சியோடு எதிர் நீச்சல் போடுவதில் ஈடுபட்டிருந்தார்.

'என்ன பிரயோசனம்? கால வேகத்தோடு, வாழ்க்கை நதி இழுத்த இழப்பில் போகிறவர்களும் முடிவில் செத்துத்தான் போகிறார்கள், எதிர்நீச்சல் போடுகிறவர்களுக்கும் அதே முடிவுதான். இவர்கள் உடலின் பலமும் உள்ளத்தில் உறுதியும் இருக்கிற வரை எதிர் நீச்சலடிக்கலாம். கை ஓய்ந்ததும் கால வேகத்தினால் அடிபட்டுப் போக வேண்டியவர்கள் தான்' என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார்.

இளமைத் துடிப்பில் புன்னைவனம் அவரைப் பார்த்து அலட்சியமாகச் சிரிக்கவில்லையா என்ன? தன்னம்பிக்கையும் மனோபலமும் இல்லாதவர் என்று பரிகசிக்கவும் செய்தார்.

ஆமாம். அது ஒரு காலம்! அப்போது அவருக்கு இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயதுதான்.

இப்போது? ஐம்பது வயதைக் கடந்துவிட்ட புன்னைவனத்துக்கு வாழ்க்கையே வறண்டதாய் அர்த்தமற்றதாய், 'நேற்றுப் போல் இன்று - இன்று போல நாளை' என்று ஒரே கதியில் சுழலும் தன்மைய தாய் சாரமற்றுத் தோன்றியது. 'உலகத்து அற்புத இலக்கியங்களை எல்லாம் படித்து இன்புற வேண்டும்; நாட்டில் கவனிப்பற்றுக் கிடக்கும் கலைச் செல்வங்கள் அனைத்தையும் ரசித்து மகிழ வேண்டும்; இயற்கை