பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கரைப் பச்சை 183

‘என்னைத் தெரியலியா இன்னும்' என்று விசாரித்தார் வள்ளியின் தந்தை.

‘தெரியலியே' என்று தன் அறியாமையை ஒப்புக் கொண்டார் மற்றவர்.

‘தெரியிறது சிரமம்தான். பார்த்து எத்தனையோ வருசம் ஆச்சுல்லே? இருபது வருசம் இருக்கும். நான் குடும்பக்கவலை, பிய்க்கல் பிடுங்கல்னு அடிபட்டு ஆளே மாறிப்போனேன். அடையாளம் தெரியாது தான். ஆனால், நீங்கள் அப்படியோ தான் இருக்கிறீங்க. கொஞ்சம்கூட மாறலே. தலையிலே ஒரு நரை கூடத்தோணலியே! என் தலையில் ஃபிஃடி...ஃபிப்டி ஆயிட்டுது!’ என்று சொல்லி, அவரே அதை ரசித்து அனுபவித்து, வாய்விட்டுக் கடகடவென நகைத்தார்.

அந்தச்சிரிப்பு, அந்தப்பேச்சு முறை - முன்பு அடிக்கடி கேட்டுப்பழகிய ஞாபகம் இருந்தது. ஆனால் அவர்யார் என்று விளங்காத திகைப்புத்தான் இன்னும். கன்னங்கள் ஒட்டி, தலைநரைத்து, கிழடுதட்டி, வதக்கல் புடலங்காயை நினைவுக்கு இழுக்கும் இந்த உருவம்...

'அருணாசலத்தை அடியோடு மறந்தாச்சுன்னு சொல்லுங்க! அதுவும் சரிதான். வாழ்க்கைச் சுழிப்பில் திசை திருப்பப்பட்டு, காலவேகத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டு அலைக் கழிந்த ஒட்டைக் கப்பல்தானே இது!’ -

அந்தக்காலத்தில் புன்னைவனத்துடன் நெருங்கிப் பழகி உரையாடிய பழைய நபர் என்பதை அவர் பேச்சுப் பாணியிலேயே எடுத்துரைத்தார் வள்ளியின் அப்பா.

புன்னைவனம் இயல்பாகப் பொங்கிய உவகைப் பெருக்கோடு எழுந்து, அருணாசலத்தின் கைகளைப் பற்றியவாறே உணர்ச்சியோடு பேசினார்: 'மன்னிக்கணும். என்ன மறதி! சேச்சே என் மறதிக்காக நான் ரொம்பவும் வெட்கப்படுறேன்... அருணாசலம்! நீங்க சொல்வது சரிதான். ஆளே அடையாளம் தெரியாமல் மாறித்தான் போனிங்க. செளக்கியம் எல்லாம் எப்படி?'

'என்கதை கிடக்கு. எல்லோருக்கும் உள்ள மாதிரித்தான். சராசரிப்பிழைப்பு. நீங்க இப்போ என்ன செய்கிறீங்க, எப்படி வாழ்க்கை நடக்குது?'

'எல்லாம் வழக்கம் போல்!' என்று கூறி முறுவலித்தார் புன்னைவனம்.

'குடும்பம் குழந்தை குட்டி?'