பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்கரைப் பச்சை 187

வாழ்வு வாழாமல் இப்படி அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறோமே என்று நான் ஏங்காத காலமே கிடையாது...'

அருணாசலம் பேசப்பேச, தன்னுடைய மனநிலையை, இழப்பை, ஏக்கத்தை அவரிடம் வாய்விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என்று புன்னைவனம் கருதினார்.

'நீங்க ஒரு ஆங்கிலக்கவிதை சொல்வீர்களே. தனியாக நிற்கும் ஒரு மலையின் உயர்ந்த முடி. அதன் கீழே, மலையின் மத்திய பாகத்தில், வெயில் அடிக்கும்; மழைபெய்யும்; காற்று தவழும்; சூறை சாடும். என்றாலும் அந்தச் சிகரம் அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றைப் பார்த்தபடி, மகாரகசியத்தின் கம்பீரமான ஒரு சின்னம் போல நிமிர்ந்து நிற்கும். இப்படி அந்த மனிதர் வாழ்ந்தார் என்று. அதுபோல் தான் வாழ்க்கையின் மாறுதல்கள் மோதல்கள் சாடுதல்களுக்கு மத்தியில், அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றை எல்லாம் பொறுமையோடு பார்த்தவாறே நீங்கள் உங்கள் காலத்தைக் கழிக்கிறீர்கள். உங்கள் நினைவு வரும்போதெல்லாம், இந்தக் கவிக்கருத்தைச் சொல்லி, உங்களை ஒரு மாடர்ன் ரிஷி என்று நான் நண்பர்களிடம் சொல்வது வழக்கம்...'

அருணாசலம் பேசப்பேச, புன்னைவனத்தின் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் கண்களில் நீர் கசிந்தது. 'நீங்க ஒண்ணு! அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்கிறீர்கள்!' என்று மட்டுமே அவரால் சொல்லமுடிந்தது.

(தீபம், 1987)


துரும்புக்கு ஒரு துரும்பு


சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்,

எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். 'ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு' என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.

'அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் தேடுறது? தள்ளுவண்டியை