பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 வல்லிக்கண்ணன் கதைகள்

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதை. அங்கு ஒதுங்கிய ஒர் இடத்தில் தனித்து நின்றது 'பொதுக்கழிப்பிடம்' - 'பப்ளிக் கன்வீனியன்ஸ்’. அவர் அதனுள் புகுந்தார். அந்தச் சமயம் வேக்மாக ஒருவன் உள்ளிருந்து வெளியே ஒடி வந்தான். வாசலில் அடி எடுத்து வைத்திருந்த அவரை இடித்துத் தள்ளி விடுவது போல் முரட்டுத்தன வேகத்தோடு அவன் வெளிப் பட்டான். "மாடு மாதிரி! கண்ணு தெரியலே, எதிரே ஆளு வர்றதைப் பார்க்க வேண்டாமா?" என்று அவர் குறைபட்டுக் கொண்டார். ஆனால் அந்தத் தடியன் எதையும் கவனிக்க வில்லை. எதிலிருந்தோ தப்பி ஓடுவது போல, ஒரு பதற்றத்துடன், தாவிப் பாய்ந்து ஓடினான்.

அவர் மறு எட்டு எடுத்து வைப்பதற்குள் இன்னொருவன் வெளிப்பட்டான். அவன் வயிற்றிலிருந்து ரத்தம் பொங்கி வடிந்தது தான் அவர் பார்வையை முதலில் தாக்கியது. அங்கே ஒரு கத்தி செருகப்பட்டிருந்தது. ரத்தம் மேலும் மேலும் குடகுபுன்னு வந்து கொண்டிருந்தது. அவன் மூச்சு இழுத்து மூச்க் விடுபவன் போல் வாயைப் பிளந்து பிளந்து மூடினான். எதுவும் சத்தமிடவில்லை. முதலில் ஒடிய தடியன் தான் அவனைக் குத்தியிருக்க வேண்டும். கத்தியால் குத்தி விட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான் என்று மாமாவுக்குப் புரிந்தது.

பட்டப்பகலில், ஒரு தெருவில், பப்ளிக் கன்வினியன்'சுக் கான ஓர் இடத்தில் ஒரு கொலை முயற்சி! பளீரிடும் ரத்தமும் வயிற்றில் செருகிய கத்தியும் இந்த உண்மையை அவர் மூளையில் அறைந்தன. அவர் பதறினார். உள்ளே போகாமல், இயல்பாக எழுந்த தற்காப்பு உணர்வு உந்த வேகமாகத் திரும்பி ஒடலானார். ஒடுவது தவறு: நாம் தான் குற்றம் செய்து விட்டு ஒடுகிறோம் என்று பார்க்கிற யாராவது எண்ண நேரிடும் என உள்ளுணர்வு புலப்படுத்தியது. அதனால் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினார். திரும்பித் திரும்பிப் பார்த்த படி வீட்டை நோக்கி வேகமாக ந;டந்தார். நல்ல வேளை. ரோடில் யாரும் இல்லை. குத்துப்பட்டவன் கொஞ்ச தூரம் நடந்து, தள்ளாடி விழுந்தது தெரிந்தது. அப்புறம் அவர் திரும்பிப் பாராமலே நடந்தார். கடவுளே! யாரும் வராமல் இருக்கணும்; போலீஸ் வராமல் இருக்கட்டும் என்று ம்னசில் பிரார்த்தித்துக் கொண்டே வேகம் வேகமாக நடந்தார். அவர் தவறு செய்யவில்லைதான். இருந்தாலும் போலீஸ் சந்தேகப்படும். விசாரணை, ஸ்டேஷன் என்று இழுத்துப் போகும். வீண்பொல்லாப்பு எதுக்கு? மனசுக்குள் பயம் திக்திக்கென்று அடித்தது. அடித்துக் கொண்டேயிருந்தது. கத்திக்குத்தும், பொங்கி வழியும் ரத்தமும், ஒசையின்றி வாயை வாயைப் பிளந்த அந்த ஆளின்