பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 வல்லிக்கண்ணன் கதைகள்

சுபாவம் உடைய ராஜம்மா குத்திக் குத்தி கேலி செய்வதற்கு விஷயம் கிடைக்கிற போது சும்மா இருந்து விடுவாளா?

'தங்கம் உன்னுடைய... உம். வந்து... உம்... உன்னுடைய... என்னவென்று சொல்ல? ஆமா ஆமா... காதலர் எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லட்டுமா?” "ஆவரா" ஸ்டைலில் டிரஸ் செய்து கொண்டு, திலீப் குமார் மாதிரி இராப் வளர்த்துக் கொண்டு, ஜிப்பி பாணியில் வேலைத்தனங்கள் செய்து...'

"சீ போ!' என்று சீறிப் பாய்ந்தாள் தங்கம்.

'தெரியும் தங்கம்!' என்று இழுத்தாள் தோழி. ஒரு நபரைத் காணாத போதெல்லாம் எங்கள் தங்கத்தின் மையுண்ட கண்கள் காற்றில் அலைபட்ட கருமேகங்கள் போல் அங்கும் இங்கும் உருண்டு புரண்டது எங்களுக்குத் தெரியாதா? பஸ் ஸ்டாப்பிலே தவம் செய்ததும், கடலோரத்திலே காத்து நின்றதும், ரோட்டிலே ஏங்கி நடந்ததும் நாங்கள் அறிய மாட்டோமா? அந்த நபர் வரக்கண்டதும் எங்கள் தங்கத்தின் முகம் செந்தாமரையாக மாறியதும், அவள் கண்கள் படபடத்ததும், இதழ்க்கடையிலே குறுநகை. பூத்ததும் நாங்கள் அறியாத விஷயங்களா? அந்த துஷ்யந்த மகாபுருடரும் எங்கள் சகுந்தலை அம்மாளும் கண்களைப் புறாக்கள் ஆக்கிக் காதல் தூது விட்டு மகிழ்ந்து போவதைத் தான் நாங்கள் தெரிந்துகொள்ளவில்லையா?...'

'ஐயோ ராஜம், சும்மா இரேன்!' என்று தங்கம் கெஞ்சினாள்.

'சும்மா இருந்தால் ஆகாதடி தங்கம். காதல் வளர வேண்டுமானால் தோழியின் தயவு தேவை. நீ தான் இலக்கிய ரசிகை ஆயிற்றே; உனக்குத் தெரியாத விஷயமா இது? என்று ராஜம்மா சொன்னாள்.

இப்படிப் பேசிப்பேசி அவள் தங்கத்தின் உள்ளத்தில் வளர்ந்த ரகசியத்தை உணர்ந்து விட்டாள். 'தங்கத்துக்கு துணிச்சல் கிடையாது. அச்சம், மடம், நாணம் வகையரா, அளவுக்கு அதிகமாக இருக்கிறது!’ என்பது தோழியின் அபிப்பிராயம். ஆகவே, தன் சினேகிதிக்குத் துணைபுரிய வேண்டியது தனது கடமை என்று ராஜம்மா தானாகவே முடிவு செய்து, செயல் திட்டத்திலும் ஈடுபட்டு விட்டாள். புதுமைப் பெண் அவள். பயம், தயக்கம் போன்றவை அவள் பக்கம் தலைகாட்டத் துணிவதில்லை. .

ராஜம்மாளின் உதவியினால் தங்கமும், அவள் பார்வைக்கு இனியனாக விளங்கியவனும் பேச்சு பரிமாறிக் கொள்ளும் நிலை பெற முடிந்தது.