பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வல்லிக்கண்ணன் கதைகள்

கிடையாது. அதிலும், அவருக்கு ஆஸ்துமா கடுமையாகிவிட்ட பிறகு வீட்டின் தெரு வாசல்படியைத் தாண்டியது இல்லை. ஆகவே, உறவினர் வீட்டுக்கல்யாணம், சாவு, ஏதேனும் விசேஷம் என்று அக்கம்பக்கத்து ஊர்களுக்குப் போய் வருவதும் நின்றுவிட்டது.

ஆண்டியாபிள்ளை மாதிரி வீடு தேடி வருகிறவர்கள்தான் சூரிய வெளிச்சமும், புதிய காற்றும்போல, அவரது சாதாரண நாட்களுக்கு விசேஷ உயிர்ப்பு தந்து கொண்டிருந்தார்கள். அனைவரிலும் ஆண்டியாபிள்ளைக்கு அண்ணாச்சியிடம் தனிப் பிடிப்பு; ஒரு தீவிரமான பற்றுதல். தனித்துச் சொல்லும்படியான காரணம் எதுவும் கிடையாது. உள்ளத்தில், உணர்வில், இயல்பாகத் தோன்றி வலுப்பெற்று விட்ட அன்பின் பிணைப்பு. அதனால் அண்ணாச்சியை நீண்ட காலம் பாராமல் இருந்து விட்டது - அவருடன் பேச்சுப் பரிமாற்றம் செய்து ஊர் விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போனது - பெரும் குறைவாகவேபட்டது அவருக்கு. இது அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

அந்த உணர்வுதான் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேராக கைலாசம்பிள்ளை வீட்டுக்கு உந்தித் தள்ளியது.

தெரு வாசல் படியில் கால் வைக்கும் போதே, 'அண்ணாச்சி யோவ்!” என்று குரல் கொடுத்தார் ஆண்டியாபிள்ளை.

திண்ணையில் இருந்த தம்பி சோம சுந்தரம், 'வாங்க!” என்று அவரை வரவேற்றான். 'உட்காருங்க!' என்றான். அவரை ஒருமாதிரியாகப் பார்த்தான்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து, திண்ணைப் பட்டியக் கல்லில் தூசி தட்டிவிட்டு, துண்டை மடித்தவாறே போட்டு அதன்மீது உட்கார்ந்தார் ஆண்டியாபிள்ளை. 'பெரியவாள் வீட்டுக்குள்ளே என்ன செய்றாக? வெளியே காணோம்?' என்று கேட்டார்.

"உங்களுக்குத் தெரியாது? அண்ணாச்சி இல்லை. இறந்து போயிட்டாக...".

ஆண்டியாபிள்ளையின் முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்திருக்க வேண்டும். திடுமென நெஞ்சில் குத்து விட்ட மாதிரி...

அவருக்கு மூச்சே நின்றுவிடும் போல் தோன்றியது. அதிர்ச்சி அவர் முகத்தில் வெளிச்சமாயிற்று. நம்பு முடியாதவர்போல் கேட்டார்: