பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

அந்த வயிற்றை அவன் தட்டிக் கொடுக்கும்போது பரவசப்படுகிறாள். பிரியப்போன அவன் கைகளை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். அதுவரை பட்டும்படாமலும் அவளிடம் பழகிய அன்னம்மா, அவளை மகளாக பாவிக்கிறாள். கட்டி அணைக்கிறாள். கன்னத்தில் முத்தம் இடுகிறாள். பிறகு ஒரு கர்ப்பிணிப் பெண் என்னென்ன சாப்பிட வேண்டும். எப்படி, இயங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறாள். அப்போதே, பாட்டியான மகிழ்ச்சியில், தனது மகன் கோபாலை பெருமிதமாகப் பார்க்கிறாள். வழக்கம்போல், தண்ணியடித்துவிட்டு வந்த கிழட்டுக் கணவனைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக திட்டாமல் சிரிக்கிறாள்.

சந்திரா வாயில் சிரிப்போடும் வயிற்றில் குழந்தையோடும் வீட்டிற்குள் சுற்றிவருகிறாள். அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறாள். இதனால் அண்ணன் மாரியப்பன் அவளை, அடித்துப் போடுவான் என்ற அனுமானத்தில் மனதில் எழுந்த ஆசையை மனதிற்குள்ளேயே முடக்கிக்கொள்கிறாள். குழந்தை பிறந்ததும், தாய் மாமனான அண்ணனை வீட்டிற்கு கூட்டிவந்து, அவனோடு பிற்ந்த வீடு போக வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போதே, அண்ணனை தாஜா செய்து அம்மாவைப் பார்க்கப் போகலாமா என்றும் ஆசைப்படுகிறாள். ஆனால், அந்த அண்ணன் ஆறுமாதசிறைவாசத்தில் மூன்று மாதத்தைத்தான் கழித்திருக்கிறான் என்று உண்மை, அவளைத் திடுக்கிட வைக்கிறது. அவனை மீறி, அம்மாவை பார்த்தால் அவன் எதுவும் செய்வான். கோபம் வந்தால் கம்சன். அவனுக்கு, ஒரு கண்ண பரமாத்மா இனிமேல்தான் பிறக்க வேண்டும்.

இப்படியாக, அல்லாடிக் கொண்டு இருந்தவளுக்கு, ஒரு நாள் பெருத்த வயிற்றுவலி... அளவிற்கு மீறிய உதிரப் போக்கு. கோபால் டூரில் இருந்தான். மாமியார்தான். அலறியடித்து அவளை ஒரு வாடகைக் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தாள். அனிதா எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றாலும், மாமியார். மகளுக்கும் சேர்த்து பணிவிடை செய்தாள். அந்த மருத்துவமனை அறைக்குள்ளேயே ஒரு துணைப்படுக்கையில் படுத்தாள். மருமகளைவிட அதிகமாக அழுதது மாமியர்தான். ஆனாலும், அபார்சன் வந்தால் உடனடியாக கருத்தரிக்கும் என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னாள்.

சந்திராவுக்கு சாப்பாடு கொண்டுவருவதற்காக, அன்னம்மா வீட்டிற்குப் போன நேரத்தில், இவளின் கல்லூரித் தோழியான டாக்டர். காயத்திரி வந்தாள். பிரசவ இயலில் மருத்துவப் பட்டம் வாங்கியவள். இவள் அவளைப் பார்த்ததும் "ஏன் இவ்வளவு லேட்டுடி..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/143&oldid=1134345" இலிருந்து மீள்விக்கப்பட்டது