பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வளர்ப்பு மகள்

ஆனந்தப்பட்டவள். உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு. முகத்தைத் திருப்பி, லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

உள்ளே. குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி, யானை குளிப்பது மாதிரி, 'டப்'பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வதுபோல ஒரு சத்தங்கேட்டது ஒருவேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலியே என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, "நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்

கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் கம்பீரம் கலையாமல் சொக்கலிங்கம் நின்றுகொண்டு இருந்தார்.

நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்தச் சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி மொத்தத்தில் சொல்லப்போனால், ஆசாமி, அழகாகவே இருப்பார்.

அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர் மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக்கொண்டு நின்றார். அவர் கண்முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்துவிட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள். ஏதோ இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.

மல்லிகாவைப் பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று. 'டப்பும்' டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, "நான் சொன்னது. உன் காதுல விழலியாம்மா" என்றார்.

"என்னப்பா சொன்னீங்க?"

"இந்தாபாரு... ஒண்ணு 'என்ன அப்பா'ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நான் என்னமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/16&oldid=1133658" இலிருந்து மீள்விக்கப்பட்டது