பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வளர்ப்பு மகள்

சொக்கலிங்கம் வெளியே போனபோது. பார்வதியும் அவள் அண்ணனும் வீட்டுக்குள் மெள்ள மெள்ள வந்தார்கள். ராமசாமி பெருமூச்சு விட்டுக்கொண்டே பேச்சைத் துவக்கினார்.

"உன்னை அடிக்கடி வந்து பார்க்கணும் போலத் தோணுது. அதேசமயம், மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டான்னு சொன்ன பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கு."

"என்னாண்ணா. புதுமொழியாய் பேசுறீங்க."

"பின்ன என்னம்மா. மச்சான் என்னை நாயை பேசுனது மாதிரி பேசுறாரு எத்தனை நாளைக்குத்தான் வாலைச் சுருட்டிக்கிட்டு வாரது?"

"அவரைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. மனசில ஒண்ணுங் கிடையாது."

"மனசில ஒண்ணுமில்லாம இருக்கவங்களுக்கு தலையில் ஏதாவது இருக்கும். உன் வீட்டுக்காரருக்கு அங்கேயும் ஒண்ணுங் கிடையாது. இல்லன்னால், நோட்டிஸ்ல வெறும் பெயரைக்கூடப் போடாத வீட்ல போய், ஒரு பவுன் மோதிரமும், நூறு ரூபாயும் கொடுப்பாரா? என் வீட்ல ஒரு கல்யாணம் காட்சி நடந்து, நான் அவரு பெயரைப் போடலன்னு வச்சுக்கோ. மனுசன் சும்மா இருப்பாரா... நீதான் சும்மா இருப்பியா?"

"எப்படியோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அவங்க படிவாசல்கூட மிதிக்கப் போறதுல்ல..."

"அங்கதான் நீ தப்புப் பண்ற."

"எங்க?"

"சின்னப் பிள்ளையில எப்படி இருந்தியோ... அப்படியேதான் இருக்கம்மா. பெருமாள் மல்லிகாவை திட்டி அனுப்புன பிறகு, அப்புறம் என்ன பேசுனான்னு தெரிந்தா, இப்படிப் பேசுவியா?"

"என்ன பேசுனாராம்?"

"நீ மல்லிகாவை மிரட்டி, அவங்ககூடப் பேசக்கூடாதுன்னு வைத்திருக்கியாம். எல்லாம் சொக்கலிங்கம் மச்சானோட முகத்துக்காகப் பார்க்கானாம். அவரு மண்டையைப் போட்டதும். மல்லிகா மூலம் உன் கண்ணுல விரல் விட்டு ஆட்டுவானாம்."

"குடிகாரன். அப்படித்தான் பேசுவான்... விட்டுத் தள்ளுங்க.."

"விட்டுத் தள்ளக்கூடிய சமாச்சாரமில்லம்மா. நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... பெருமாள் சொன்னபடி செய்யமாட்டார்னு எப்படிச் சொல்லமுடியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/40&oldid=1133688" இலிருந்து மீள்விக்கப்பட்டது