பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

31

மல்லிகாவிற்கு வருத்தந்தான் தன்னையே ஆறுதல் படுத்திக்கொண்டாள். அம்மாவுக்கு உடம்புக்குச் சுகமில்லைபோலும். உடம்பு சரியில்லன்னா மனசும் சரியா இருக்காது. அம்மாகிட்ட போய் பேசலாமா? வேண்டாம் எரிச்சல் இருக்கிற சமயத்தில் போனால் தப்பு. காலையில் பார்த்துக்கலாம்.

சொக்கலிங்கம் மகளிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தார்.

"என்னடி ஒரு மாதிரி இருக்கே?"

"ஒண்ணுமில்ல."

"ஓ... உன் அண்ணன் வந்துட்டுப் போனாரோ... இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படித்தான் இருப்பே. அடுத்துக் கெடுக்குறதுல்ல நிபுணனாச்சே."

"ஆமாம்... அவரு அடுத்துக் கெடுக்கவரு. நீங்க அரிச்சந்திர பிரவு ஒரு பவுன் மோதிரம் வாங்குனதை சொன்னீங்க பாருங்க."

"தற்செயலாய் வாங்குனேன்டி அதுல அர்த்தம் பார்க்காதே."

"நான் நடக்கிறதை எல்லாம் கவனிச்சிட்டுதான் பேசுறேன். மல்லிகா மேல உங்களைவிட எனக்குப் பாசம் அதிகம். அதனால்தான் கேக்கறேன். என் அக்காள் மகன் ராமனுக்கு நம்ம மல்லிகாவை கல்யாணம் பண்ணலாமுன்னு நினைக்கேன்."

"என்னடி இது? காது கொடுத்தால், எதையும் பேசலாமுன்னு நினைக்கிறியா? பேசறதுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்? உனக்கு அறிவிருக்கா? அந்த ஓணான் பயலுக்கா இவளை கொடுக்கச் சொல்ற. இனிமேல், இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால், நான் பொல்லாதவனாய் மாறிடுவேன். ஜாக்கிரதை."

பார்வதி புரண்டு படுத்தாள். மல்லிகா ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும்போது, அவள்மீது ஏற்பட்ட வெறுப்பு, இதுவரை அவளுக்குத் தெரியாமலே அடிமனதில் பதிந்து இருந்தது. அந்த உளைச்சல் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. ராமன் இருக்க வேண்டிய இடத்தில் தத்துப் பிள்ளையாக தன் அக்காள் மகன் இருக்கவேண்டிய இடத்தில், இன்னொருத்தியின் மகள் - ஒரு குடிகாரன் பெற்ற பெண் இருக்காள்!

பார்வதி பேயாக மாறிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/45&oldid=1133694" இலிருந்து மீள்விக்கப்பட்டது