பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8

இந்தச் சமயத்தில் ஒருநாள் சொக்கலிங்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.

டாக்டர், உடனடியாக வந்துவிட்டதால், கருப்பு பார்டர் போட்ட ஈமப் பத்திரிகைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. என்றாலும் மனிதர் ஆடிப்போய்விட்டார். இது, இரண்டாவது முறை. மூன்றாவது எப்படி இருக்குமோ...

பார்வதியும், மல்லிகாவும், அவரை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள். செல்லம்மாவும் வந்து பார்த்தாள். கல்யாணமாகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்திராவும், அவள் புருஷனும் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். ஆனால் பெருமாள் மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

எப்படியோ, சொக்கலிங்கம் தேறி வந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் பார்வதி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். கணவர், பதறிப்போனார்.

"ஏம்மா அழுவுறே... எனக்குத்தான் சுகமாயிக்கிட்டே வருதே!"

"ஏதோ ஆண்டவன் புண்ணியத்தால, இந்தத் தடவை என் தாலி கெட்டியாய் இருக்கு. இன்னொரு தடவை. இப்படி வந்து, நடக்கக்கூடாதது நடந்துட்டால், என் கதியை நினைச்சிப் பார்த்தேன். நாய்கூட திரும்பிப் பாராது."

"பைத்தியம்... அப்படியெல்லாம் பேசப்படாது. உனக்கு ஒரு குறையும் வராது. மல்லிகா நல்ல பொண்ணு."

"மல்லி நல்லவள்தான்... அவளுக்கு வாய்க்கிறவன் நல்லவனாய் இருக்கணுங்கறது என்ன கட்டாயம்? அவள் அப்பன்... என்னை மிரட்ட மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்?"

"சரி, கவலைப்படாதே. உடம்பு சுகமானதும். அவளுக்கு நல்ல பையனாய் பார்க்கேன்!"

"கையில வெண்ணெயை வைத்துக்கிட்டு எதுக்காக நெய்க்கு அலையணும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/50&oldid=1133704" இலிருந்து மீள்விக்கப்பட்டது