பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9

மல்லிகா, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். காலை நேரம் கல்லூரிக்குப் போக, இன்னும் நேரம் இருந்தது. புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, அன்று கல்லூரியில் நடக்க இருந்த பேச்சுப் போட்டி நினைவுக்கு வந்தது. பெயரைக் கொடுத்துவிட்டாள். முதல் பரிசு சரவணனுக்கே போய்ச் சேரும் சந்தேகமே இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசாவது அவள் வாங்கியாக வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரி வாசலில் சைக்கிள் பெடலில் ஒரு காலை வைத்துக்கொண்டு நன்ற சரவணனிடம், அவன் நண்பன் ஒருவன் "எங்கேடா புறப்பட்டுட்டே?" என்று கேட்டதும், அதற்கு அவன், "தி.நகரில் எங்க மாமா வீட்டுக்குப் போய்விட்டு வரணும்' என்று சொன்னதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே, 'என் வீடும் அங்கேதான் இருக்கு' என்று அவனிடம் சொல்லவேண்டும் என்பதுபோல் துடித்தாள். துடித்தது. வாயில் வராத வார்த்தையாகி, இதயத்துள் எழுந்து, இனம்புரியாத இன்பதுன்ப எல்லையைக் கடந்த ஒருவித மோன உணர்வாய் முகிழ்த்தது.

மல்லிகா, ஊஞ்சல் பலகையில், இரண்டு நாட்களாக வந்து உட்காருவதற்குக் காரணமே, இந்த சரவணன்தான். ஒருவேளை அவனது மாமா வீடு, இந்தத் தெருவிலேயே இருக்கலாம். மாமா வீடு என்றாரே... அந்த மாமாவுக்கு பொண்ணு எதுவும் இருக்கலாமோ? அவனைக் காதலித்துத் தொலைத்திருக்கலாமோ?

மல்லிகாவிற்கு, தாபமாக இருந்தது. அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அடுத்த தெருவிலேயே ஒரு கூட்டம் நடந்து - அது எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும், அவன் அதில் பேச வேண்டும் அவள் முன்வரிசையில் உட்கார்ந்து, முன்பல் தெரியச் சிரித்துக் கைதட்ட வேண்டும் என்று நினைத்தாள். திடீரென்று அவள் மனதில் இன்னொரு எண்ணம் சீச்சீ... இந்த மாதிரி எண்ணம் வரக்கூடாது. அவரே பேச முயற்சி செய்யாதபோது. நான் ஏன் அவரைப் பற்றி நினைக்க வேண்டும்? எனக்கேன் தன்மானம் தலைகீழாகப் போகவேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/53&oldid=1133709" இலிருந்து மீள்விக்கப்பட்டது