பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

45

"ஏய் மல்லி" என்று 'பார்வதி' கூப்பிட்டபோது, அங்கே ஓடிவந்தவள். உள்ளே அடிபட்ட பேச்சு, தன்னை அடிக்கும் பேச்சு என்று தெரிந்ததும். அவள் இங்கே இந்த சுவரில் சாய்ந்தாள்.

மல்லிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ராமனுக்கா அவள்? தெரு முழுதும் புரண்டுகொண்டு போவானே அவனுக்கா நான்? குடித்துக்கொண்டு புரள்வது மோசம் என்று நினைத்து புரண்டுகொண்டே குடிப்பானே, அந்த ராமனுக்கா நான்? கெட்ட வார்த்தை தவிர, எந்த வார்த்தையும் பேசாத அந்த கெட்டவனுக்கா நான்? முடியவே முடியாது.

என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்தவாறு அவள், தலையை சுருட்டியபோது, பார்வதி வெளியே வந்து "சுவர்ல தலைய வைக்கிறியே அறிவிருக்கா உனக்கு? இந்தாப் பாரு! சுவருல்லாம்... எண்ணெய்க் கசடு... உன் அம்மா புத்திதானே உனக்கும் இருக்கும். வேணுமுன்னா அவள் கூட போயேண்டி. ஏண்டி, அழுவுறாப்போல நிக்கறே?" என்று அதட்டினாள்.

ராமனை, அவள் கல்யாணம் செய்துகொள்ள மாட்டாள் என்ற உள்ளுணர்வு பார்வதியை, இதுவரை பேசாத வார்த்தைகளைப் பேச வைத்தன.

மல்லிகா திடுக்கிட்டாள். என்னதான் அம்மா என்றாலும், முகம் பார்த்துப் பேசியறியாத அந்த அன்னை வாழும் வீட்டுக்குள் அவளால் போகமுடியாது. அவளால் எப்படிப் போகமுடியும்? போனாலும், எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டை விட, அந்த ஜனங்களைவிட ராமன் தேவலையோ... ஒவ்வொருத்தர், அண்ணன் தங்கைன்னா உயிரை விடுறாங்க. சினிமாவுலகூட காட்டுறாங்க. நம்மால் அப்படி இருக்க முடியலியே... இந்த வீட்டையும் சிலசமயம் சொந்த வீடாய் நினைக்க முடியலியே. ஏன்... ஒருவேளை... நான் தனிப் பிறவியோ... இல்ல தனிப்படுத்தப்பட்ட பிறவியோ...

மல்லிகா, தன் வசப்பட்டு நின்றபோது. பார்வதி உணர்ச்சி வசப்பட்டாள்.

“ஏண்டி... பித்துப் பிடித்து நிக்கறே? உன் அம்மா... மருந்து தடவிட்டுப் போயிட்டாளோ? வேணுமுன்னா போயேண்டி. நான் வேணுமுன்னா... கொண்டுவிடட்டுமா?"

அந்த சின்னஞ்சிறிசுக்கு சுய உணர்வு வந்தது. அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாளோ? அந்த 'ஆளிடம்' பேச்சு வாங்க வேண்டியது வருமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/59&oldid=1133718" இலிருந்து மீள்விக்கப்பட்டது