பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதலுரை

1979-ம் ஆண்டு ராணிமுத்துவில் மாத நாவலாக வெளியாகி 1980-ம் ஆண்டு முதல் ஐந்து பதிப்புகளைக் கொண்ட 'வளர்ப்பு மகள்' நாவலையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'வாசுகி' பத்திரிகையின் பொங்கல் இதழில் வெளியான 'இந்திரமயம்' என்ற குறுநாவலையும் உள்ளடக்கியது இந்த நூல். பல பதிப்புகளைக் கண்ட வளர்ப்பு மகளுக்கு நான் முன்னுரை எழுதியதே இல்லை. இப்போது இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதோடு, அதே சாக்கில் இந்திரமயக் குறுநாவலின் பின்னணியைப் பற்றியும் குறிப்பிடுகிறேன்.

மலரும் நினைவுகள்

எனக்கு இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது. 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் எனது குடும்பத்தினருடன் பழனி செல்வதற்காக திண்டுக்கல்லை நோக்கி ரயிலில் பிரயாணித்தேன் - பகல் வேளை, அப்போதுதான் ராணி முத்து நாவலாக வெளியான ‘வளர்ப்பு மகள்’ நாவலை சிலர் கையில் வைத்திருந்தார்கள். சிலர், தள்ளுவண்டியில் இருந்து வாங்கிக் கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. மாத நாவல் வாசகர்கள், எப்படி தத்தம் புத்தகங்களில் ஒன்றிப் போய்விடுவார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த நாவலை வாங்கியவர்கள் ஒரு சில பக்கங்களைப் படித்துவிட்டு முகஞ்சுளித்தபடியே மூடி விட்டார்கள். ஏற்கனவே கையில் வைத்திருந்தவர்களோ, அதை விசிறியாகவும், தலையணையாகவும் பயன்படுத்தியதைக் கண்கள் எரியப் பார்த்தேன். நான்தான் அந்த எழுத்தாளர் என்று அவர்களிடம் சொல்லப்போன வாயை மூடிக்கொண்டேன். என் மனைவியும், குழந்தைகளும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். இந்தப் பின்னணியில் ராணி முத்து நிர்வாகம் என்னிடம் மேற்கொண்டு மாத நாவல் கேட்காததை வருத்தமில்லாமல் புரிந்து கொண்டேன்.

இந்தச் சூழலில் ஓரிரு ஆண்டுகளில், இந்த நாவல் டில்லிப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கும், மத்திய அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாவது வகுப்பிற்கும் பாடநூலாய் வைத்திருப்பதாக தமிழனின் கூனை கவிதைகளால் நிமிர்த்த முயன்ற பேராசிரியர் சாலய் இளந்திரையன் அவர்கள் என்னிடம் தெரிவித்தார். காலமான அந்தப் போராளிக் கவிஞரை இப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/9&oldid=1133650" இலிருந்து மீள்விக்கப்பட்டது