பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வளர்ப்பு மகள்

ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்களும். பெண்களுமாகச் சேர்ந்து தாயப் பாஸ் ஆடுவதை முதலில் தொலைவில் இருந்தும், பிறகு பக்கத்தில் இருந்தும், ரசித்துவிட்டு, இப்போது மல்லிகாவும் சேர்ந்து ஆடத் துவங்கினாள். சாப்பிடுவதற்கு மட்டும் 'போர்ஷன்களை' வைத்துவிட்டு, மீதி சகலத்திற்கும் களத்தை (முற்றம்; பொதுத்தளம்) பயன்படுத்தும் ஏழை எளியவர்கள், இளம் பெண்கள். இளைஞர்கள் முதலியோர் ஆயிரக்கணக்கான சினிமாக்களின் காதல் காட்சிகளை அலசிவிட்டு அருகருகே படுத்தாலும், எந்தவித இச்சைக்கும் தங்களை விருந்தாக்காத பெரும் பண்பு, அவளைப் பெரிதும் கவர்ந்தது. கல்லூரிகளில் பெண்களைப் பார்த்தவுடனேயே விசிலடிக்கும் பையன்களையும், மாணவிகள் மொத்தமாகப் போகும்போது தனியாக அகப்படுபவனைப் பார்த்துப் பேசும் கிண்டல் கேலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க, இந்த நாகரீக மைனர்களும், 'மைனி'களும், அவளுக்கு நாட்டின் எச்சங்கள் போலத் தோன்றின.

மல்லிகா பார்வையாளராக மட்டும் நிற்கவில்லை. அந்த ஏழைபாளைகளின் பிரச்சினைகளில் பங்காளியாகவும் மாறினாள்.

'இட்லிக்கடை' ஆயா தங்கம்மாவுக்கு இட்லிக் கணக்கை எழுதிக் கொடுத்தாள். கொத்தனார் வேலைக்குப் போகும் ராக்கம்மாவுக்கு கடிதங்களை எழுதிக் கொடுத்தாள் வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒன்றை ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு கடிதங்களாகச் செலவழிப்பவள், அந்தப் பெண். தபால்காரர். குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் கடிதங்களைப் படித்துக் காட்டி, இப்போது, துறைமுகத்தில் மூட்டை சுமக்கும் கந்தசாமி, ஆட்டோ ரிக்ஷா ஒட்டும் சண்முகம், கோணி தைக்கும் அருணாசலம், சுக்குகாபி விற்கும் சுந்தரம், பீடி சுற்றும் மாரியம்மாள் முதலியாரின் குடும்ப விபரங்கள் அவளுக்கு அத்துபடி முதலில் பள்ளிக்கூடம் போகும் தம்பிக்கு, பாடம் சொல்லிக் கொடுத்தபோது, சிம்மாட்டுடன் வந்த ராக்கம்மா. "எங்களுக்கும் கையெழுத்துப் போடயாவது சொல்கிக் கொடும்மா" என்றாள்.

அன்றே, ஒரு போர்டில்லாத முதியோர் கல்வித் திட்டம் துவங்கியது. பல பெண்கள். அவளைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு. 'ஆனா, ஆவன்னா' எழுதத் தொடங்கினார்கள். கணவன்மார்களை நச்சரித்து. சிலேட்டு. 'பல்பங்களை' வாங்கிக் கொண்டார்கள். மத்தியானம் பானையில் இருப்பது வயிற்றுக்குள் போனதும். மல்லிகாவின் மூளைக்குள் இருப்பது அவர்களின் செவிக்குள் போகத் துவங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/90&oldid=1133783" இலிருந்து மீள்விக்கப்பட்டது