பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


தாக்கும் பகுதிக்குத் தலைமை தாங்கி நடத்தும் இவருக்கு நிறையத் தேவைப்படுவது-தன்னம்பிக்கை, தளராத ஊக்கம், கோலாட்சித் திறன், பக்குவமாகப் பந்தை வழங்கல் இலக்கிற்குள் குறியுடன் பங்தை அடித்தல், களைப்பில்லாத கட்டுடல், சலியாத நெஞ்சுரம், சதிராடும் சாகசம் ஆகும்.

    இரண்டு பக்கங்களிலிருந்தும் ஆடுகின்ற சக முன்னாட்டக்காரா்களையும் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் பக்குவம், பயிற்சி அனுபவமும் பரிபூரணமாக இவருக்கு அமைந்திருக்கவேண்டியது மிகமிக அவசியமாகும்.
   மற்ற முன்னாட்டக்காரா்கள் அனைவருடனும் ஒருவரை ஒருவர் உணர்ந்து ஒற்றுமையுடன் ஆடவும், விரைவாகவும் இலகுவாகவும் பந்தை வழங்கிக் கொள்ளவும், சமயத்திற்கேற்ப இடம் மாற்றிக் கொண்டு ஆடவும், எதிர்க்குழு இலக்குக் காவலனின் திறமை எப்படி என்பதனையும் உணர்ந்து ஆடுவதுதான் சிறந்த ஆட்டக்காரருக்குரிய தகுதிகளாகும்.
   இடப்புற வலப்புற முன்னாட்டக்காரா்கள் : இடப்புற உள், வெளி வலப்புற உள் வெளி ஆட்டக்காரா்கள் நால்வரும், மைய முன்னாட்டக்காரருக்கு ஒத்துழைப்பை நல்கி, சதா காலமும் எதிர்க்குழு இலக்குவை முற்றுகையிட்டு சாகசம் புரிகின்ற சர்வ வல்லமையுள்ள வீரர்களாவார்கள். 
   ஒரு குறடுவின் இரு பிளவுகள் போல, இவர்கள் பிரிந்து இருந்து, திடீரென்று பந்து வந்ததும் கூடி வந்து, குறடு கவ்வுவது போல, கூடிக்கலந்து இலக்கினைப் பந்தால் தாக்க வேண்டும்.