44
சும்மா விடக்கூடாது. கூப்பிடு மயிலை! கூறு, தமிழகத்திலா இந்த அதர்மச் செயல் நடந்தது? வள்ளி! கோபிக்காதே! மறந்துவிட்டேன், யார் அங்கே மந்திரி? அங்கு அடிக்கடி மாறிவிடுவதால் கவனம் வைப்பது கஷ்டமாகிறது” என்று கேட்க “சட்டம் இயற்றிய முதல் மந்திரி ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்” என்றார். “ஓமந்தூராரா? அவர் நமது பக்தராயிற்றே!” என்றார் முருகன்! “பக்தன் செய்கிற செயலா இது! மற்றவர்கள் ஏதேதோ காரணம் காட்டி, இருதாரம் கூடாது என்று வாதாடினாலும், அவர் உண்மையாகவே, உமது பக்தராக இருந்தால், என்னப்பன் முருகனே இருதாரம் கொண்டார் என்று எடுத்துக்காட்டித் தடுத்திருக்கமாட்டாரா, சட்டத்தை” என்று அம்மை கூறிட, வேலவன், “ஆமாம்! என் பக்தன்போல் வேடமிட்டு, என் வாழ்க்கை முறையையே கேவலமாக்கும் சட்டம் இயற்றிய ஓமந்தூராரை நேரிலேயே சென்று கேட்கிறேன்” என்று கூறிவிட்டு, மயிலேறி மறைந்தார்.
வள்ளி அம்மை, ஆனந்தமாக, பலகணி அருகே சென்று தெய்வயானையின் மாளிகையை நோக்கிய வண்ணம், “குதிக்காதே தேவா! குமரன் போயிருக்கிறார், குறும்புச்சட்டத்தை நொறுக்க” என்று மெல்லக் கூறியபடி இருந்தார்.
சிறிது நேரத்திற்கெல்லாம், மயிலேறும் பெருமாள், வந்தார், முகத்திலே வாட்டத்துடன்.
வள்ளி கோபக்குறியுடனேயே வரவேற்று, “ஏன்! உமது வாதம் ஏதும் பலன் தரவில்லையோ?” என்று கேட்க, முருகன், “வாதமா! ஒமந்தூரார் பேசவே இல்லையே என்னிடம்” என்று கூற, “ஏன், பேசவே இல்லையா! இப்படி உம்மை அவமதிப்பவரை பக்தர் என்று நம்புகிறீரே! ஏன்