உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தெரிகிறதா, நான்—நம்பி மோசம் போனவன் வந்திருக்கிறேன், கணக்குக் கேட்க வந்திருக்கிறேன், கண்திறந்தபடி வந்திருக்கிறேன், கருத்திலே புது அறிவு தோன்றியது அதனால் வந்திருக்கிறேன், கேட்கிறேன் பதில்கூறு, ஆமாம்! நெஞ்சிலே கொஞ்சமும் வஞ்சகமில்லாதவன் கேட்கிறேன், உண்மையைக் கூறு. பணக்காரனுக்குப் பக்கமேளம் அடிப்பதா உன் வேலை, அக்ரமக்காரனுக்குத் துணை செய்வதா உன் குணம், இதுவா தெய்வீக இலட்சணம், இதற்கா என்போன்ற ஏழைகளிடம் பூஜை பெறுகிறாய், பெற்ற பூஜைக்கு, என்ன பலன் தந்தாய், இதோ பஞ்சடைந்த கண்கள், பார்! பக்தன் நான், படையலிடுகிறேன் உனக்கு, எனக்குப் பஞ்சடைந்த கண்கள், எலும்புக்கூடு என் தேகம், என் எதிரே, நீ, அலங்காரம், அபிஷேகம், ஆராதனை, நீதிதானா—தாய்! ஜென்மாதா! யாருக்கு? எனக்கா! ஏழைக்கா! சொல், சொல்லம்மா சொர்ணாலங்காரியே! சொல்! சோற்றுத் துருத்திகளைச் சொகுசாக வாழவைத்துக்கொண்டிருக்கிறாயே, சரியா முறையா—சொல்—சொல்—வெட்கத்தால் வாயடைத்து விட்டதா—பயத்தாலே மெளனமாகிவிட்டாயா—பயமாகவா இருக்கிறது, பராத்பரீ, பயமா, என்னிடமா? பக்தன் நான், ஏன் பயம்? எப்படி இல்லாமல் போகும், பக்தன் விழித்துக் கொண்டுவிட்டானே, இனி விபரீதம் நேரிடுமே என்று பயப்படத்தான் செய்வாய்—நடுங்கு, நல்லவர்களை நலியச் செய்த உன்னை நேருக்குநேர் நின்று கேட்கிறேன், பதில் கூறு, வக்கு இருந்தால், என்மீது தவறு இருந்தால் எடுத்துக்காட்டு—உன்மீதுள்ள குற்றங்களை நான் எடுத்துக்காட்டினேன், தைரியமிருந்தால், மறுத்துப் பேசு! ஊமையாக மட்டும் இராதே! உன்னைச் சும்மாவிடமாட்டேன்! உலகறியச் செய்வேன் உன் சூது சூழ்ச்சிகளை! வாய்திறந்து பேசு!