உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கடவுளே! கடவுளே! நல்ல கடவுளடா இது! நயவஞ்சகனை வாழவிட்டு வேடிக்கை பார்க்கிற கடவுள்!

கடவுள் ‘மனசி’லே என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாரோ, யார் கண்டார்கள்?

கடவுளைக் காணவா முடியும்! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்!

கடவுள்—இந்தச் சொல்லைக் கலந்து பேசுவதிலே, இப்படிப் பலவகை உண்டு. பேசுவோரின் சுபாவம், அவர் பேசும்போது அவருக்கு உள்ள நிலைமை, அவருடன் உரையாடுபவரின் தன்மை, ஆகியவைகளுக்கு ஏற்றபடி, இந்த ‘வகை’ இருக்கும். எல்லோரும் ஒரே மனப்பான்மை கொண்டவர்களல்ல—எனவே, அனைவரும் ஒரே வகையாகப் பேசவேண்டுமென்பதில்லை — பேச்சு பலவகையாகத்தான் இருக்கும். இதிலே ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஒரே ‘ஆசாமி’ கடவுள் சம்பந்தமாகப் பேசும்போது ஒரு வேளை ஒரு வகையாகவும், மற்றோர் வேளை மற்றோர் வகையாகவும் பேசுவார்—ஆச்சரியம் அதிலேதான் அதிகமிருக்கிறது. வேளைக்கோர் வகையாக இந்தப் பேச்சு மாறுவதை, பேசுபவரேகூடச் சரியாக உணருவதில்லை—சுட்டிக்காட்டும் போதுகூட, அவர் சிரிப்பார் அல்லது சீறுவார்—விளக்கம் தரமாட்டார்.

கடவுள் என்ற சொல்லைக் கலந்து பேசாதவர்கள் மிகக்குறைவு; கடவுள் என்ற சொல்லை எப்போதும் ஒரேவிதமான மனப்பான்மையுடன் பேசுபவரோ, அதைவிடக் குறைவு! சிலர் சில வேளைகளில் பேசும்போது பார்த்தால்