பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முகவுரை


திருக்குறள் நண்பர்களே!

வணக்கம்,
“வள்ளுவம்' எனப் பெயரிய நூல் பன்னிரண்டு சொற்பொழிவு களைக் கொண்டது. இவை யாண்டும் யார் முன்னும் பேசப்பட்டன வல்ல; யானே திருவள்ளுவரை முன் வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகள். இஃதோர் இலக்கியப் புது நெறி. உங்கட்கும் எனக்கும் நெஞ்சக்கலப்பு - சுற்றப்பிணிப்பு - உண்டாகும் என்ற நோக்கத்தால், கற்பனைப் பொழிவு நெறியை மேற்கொண்டேன்.

சென்ற கால நம்மொழித்தாயின் இயற்கை வளம், நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவுக் குறைவு, வருங்காலத் தமிழகத்தின் தூய பெருஞ் செயல்கள் என இவ்வெல்லாம் நீள நினைந்தேன். இந்நினைவுச் சூல் முதிர்ச்சியால் பிறந்தது வள்ளுவத் தமிழ்க் குழவி.

வள்ளுவ நூலின் நடை கற்பவரை நிறுத்திக் கற்கச் செய்யும்; வேகப் படிப்பைக் குறைத்து விளங்கிப் படிக்கத் தூண்டும்; சொல் தோறும் ஒன்றி நின்று மனம் வைத்து அறிவு செலுத்தி உண்மை காணச் சொல்லும். ஒரளவேனும் தமிழ் இலக்கியம் பயின்றார்க்கு - மொழியறிவு பெற விழைவார்க்கு - வள்ளுவம் அரிய நடையதன்று: கருத்துக்கு உரிய நடையது எனத் தமிழறிஞர் உடன்படுவர்.

வள்ளுவம் தொகுப்பு நூலன்று; முதற்கண் முழுதும் வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூல். ஆதலின், கற்கும் பெருமக்கள் சோற்றுப்பதம் காண்பது போல் இடையிடையே ஒரு பக்கத்தை விரித்துத் தள்ளிக் கல்லாது, முதல் தொடங்கி வரன்முறையாய்க் கற்பாராக. இஃது என் விழைவு.

தூய கிழமையிர் வள்ளுவநூற் கருத்துக்களைப் பிறர் ஏற்றல் வேண்டும்; ஏற்குமாறு வலிந்தேனும் உரைத்தல் வேண்டும் என்பது என் குறிக்கோள் அன்று. யான் கண்ட வள்ளுவங்களை - அவற் றுக்கு நிலைக்களனாகக் கொண்ட உலகியல் விளக்கங்களை - பிறர் அறிதல் வேண்டும்; அறியுமாறு அழுத்தம் பெற மொழிதல் வேண்டும் என்பதுவே என் குறிக்கோள். கொள்ளுவதும் தள்ளுவதும் நும் அறிவின் தனியுரிமை. தள்ளுங்கால் ஆசிரியனுக்கு மாசு கற்பிக்க முயல வேண்டா என்று வேண்டுவல்.

காரைக்குடி வ.சுப. மாணிக்கம்
1.4.1953.