பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வள்ளுவம்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430)

என்னும் ஒரு குறளே தனிச்சான்று. தம்மறிவை ஆட்சிப்படுத்தி னாரை, “அறிவுடையார் என்றும், அதனை ஆளாதாரை ‘அறிவிலார்: என்றும் இயம்புப. ஏதனையும் ஆளுபவனே உடையான்; ஆளா தாவன் இல்லான் என உடைமை இன்மைகட்கு. பொருட்பயன் நிலை என்னும் தலைப்பில் இலக்கணம் கண்டோம். ஆதலின் பிறப்பில் அறிவுடையார், பிறப்பில் அறிவிலார் என்று பொருள் கொள்ளன்மின் ஆளும் அறிவு ஆளா அறிவு என்றே கொள்க. ‘அறிவின்மை இன்மையுள் இன்மை (841) என்ற குறட்பகுதிக்கும் இதுவே கருத்தாகும். ஈண்டெலாம் யான் வலிந்து பொருள் செய்வதாக நினைப்பது பிழை. பிழை என்பதைப் பின்னொருகால் உணர்வீர்கள். இந்தியா செல்வம் இல்லா நாடு என்றால் கருத்து என்னை நிலத்துட் கிடக்கும் இயற்கைச் செல்வத்தை எடுத்தாளும் வலியில்லா நாடு என்பதன்றோ குறிப்பு.

மக்கட்கு ஒழுக்கம், அறிவு, கல்வி, ஊக்கம், முயற்சி என்னும் பிரிவில்லா இயற்கை நலங்களே பிறழா வாழ்வு நலங்கள் என்பது வள்ளுவம். ஒருவற்குப் பொருள் பிரிந்து நிற்கும் உடைமை என்ற கருத்தால், உள்ளம் உடைமை உடைமை’ (592) எனத் தன்னுடைமை தெளிப்பர். உணவினைச் சிறு கரண்டியால் உண்ணினும் அக்கரண்டி பிடித்தற்குத் தன்கை வேண்டுமாப் போல, வாழ்வுக்குப் பொருள் வேண்டினும் அஃது ஈட்டற்கு முதற்கண் வேண்டுவது தன் முயற்சியே என்ற கருத்தால், முயற்சி திருவினை ஆக்கும் (616) என நுண்ணிய கருவி காட்டுவர். உடலணிகள் புறத்தணிகள் என்ற கருத்தால், கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் (575), பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி (95), நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (115) என அகத்தணி பூட்டுவர். பார்வைக்கண் கண்ணாகா என மறுத்து, கண்ணுடையர் என்பவர் கற்றோர் (393) என அகக் கண் வேண்டுவர். ‘நாநலம் என்னும் நலன் உடைமை (641), குணநலம் சான்றோர் நலனே (982), கேடில் விழுச் செல்வம் கல்வி (400), செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் (4.11),