பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 217

செயலிழுக்காய் முடியும்; வாழ்க்கை யழிவாய்ப்போம். அன்புடைய இன்ப ஞாலமாக ஆவது, பாடுபடத்தக்க உயரிய நன்னோக்க மாயினும், அப்பொழுது ஞாலம் இயலும் நடைமுறையையும் குறித்துக்கொள்ளல் வேண்டும். இங்ஙன் பிறழா உலக அடிப்படைமேல் வள்ளுவக் கொத்தர் திருக்குறள் கட்டினார்: ஆதலின், அவரும் பிறழார்; அவர் குறளும் பிறழா என்பது என் துணிவு. ஒரு நூல் குறிக்கோளே முழுதும் கூறுவதாயின் வாழ்க்கைக்கு ஒட்டாது. அன்றி அற்றைப் பொழுது கழிக்கும் நடைமுறையே முழுதும் காட்டுவதாயின் வாழ்க்கையை உயர்த்தாது. இக்கருத்தால், ஒட்டும் நூலாக, உயர்த்தும் நூலாக, எதிர்நோக்கும் நிகழ்நடையும் இணைந்த வாழ்க்கைச் செயல் நூலாக, வள்ளுவர் தம் நுலை அமைத்தருளினார். அறத்துப் பால் முழுதும் குறிக்கோள் நிரம்பியது. பொருட்பால் குறிக்கோளும் நடைமுறைச் செயலும் இணைந்தது. காமத்துப்பால் உலகவொழுக்கமே சுட்டுவது. இதுகாறும் திருக்குறளரசின் அமைப்பு வள்ளுவங்களையும் வெளிநாட்டு வள்ளுவங்களையும் ஒரளவு ஆராய்ந்தோம். இனி உள்நாட்டு வள்ளுவங்களை ஒருபால் ஆராய்வோம்.

ஒருவன் உடல் வன்மையோ, செல்வ வலியோ, கல்வித்திறலோ, அறிவுக் கூர்மையோ பெற்றிருப்பின், அவன் தன்னாற்றலைக் கொண்டு பிறரைக் கெடுக்கவே முந்துகிறான்; அச்சுறுத்தியும் வஞ்சித்தும் எளிதாக வாழ அவாவுகின்றான். செல்வாக்கைப் பிறர் அழிவுக்கு ஆளுவதே ஒழுக்க மிலாதார்தம் உலகப் போக்காகக் காண்கின்றோம். ஒரு நாட்டின்கண் அரசு என்பது பேராற்றல் தங்கிய அமைப்பு: கொலைப் பயிற்சி பெற்ற படைத்தொகையுடையது. நாட்டுத் தலைவன் தன் பதவி காக்கவும், தனக்கொவ்வாக் கொள்கை யினரை அழிக்கவும் தீது செய்வான் என்றும், குடிக்காப்பு என்னும் பெயரால் கொலைபல செய்து தற்காப்புக் கொள்வான் என்றும் ஆசிரியர் கருதினார். நின் வலியால் நல்லது செய்க என்று விதிப்ப தினும், அல்லது செய்யாதே; செய்யின் பெருவலியால் நீ அழிவாய்’ என்று தீமை தடுக்க விரும்பினார். படைப்பெருக்கும், தலைமைப் பதவியும், பிற புறத்துணைகளும் வன்மையாகா, வன்மை எனப்படு வது குடிமக்களின் பற்றுக்கோடு என்று இடம் காட்ட எண்ணினார்.