பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 271

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (997)

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை (998)

தற் செருக்கு இன்றி, மக்களினத்தை - மனிதன் மனிதனை - நன்கு மதிக்கும் ஒழுக்கத்துக்கு மக்கட்பண்பு என்று உரிய பெயர் செய்தார் வள்ளுவர். கொள்கைப் பரப்பும் பதவிப் பான்மையும் இடையறாது நினையும் இக்கால மக்கட்கு வேண்டுவது இப்பண்பு வள்ளுவமாம். வாழ்க்கைத் தோழர்களே! யான் கண்ணாரக் கண்ட இரு நிகழ்ச்சிகள் என் நெஞ்சத்து. இம் மக்கட் பண்பினை நன்னர்ப் பதிவு செய்தன. கேட்பவர் தம் உள்ளத்தையும் அவை பிணிக்கும் ஆற்றல் வாய்ந்தன என்ற கருத்தால், ஈண்டு வெளியிடுவன்.

1. ஒன்பதாண்டுகட்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஒரு தமிழ்ப் பெருங்கூட்டம் கூடிற்று, அதன் தலைவர் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர், பல்கலைப் புலவர் கா. சுப்பிர மணியனார் அவர்கள். அற்றைச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள். முறைப்படி இறைத் தமிழ் வணக்கம் பாடப் பட்டது. பாடுங்காலை தலைவரும் ஆயிரம் பேர் குழுமிய அவை யினரும் எழுந்து நின்றனர். கடவுட் கொள்கையில் நம்பிக்கையற்ற ஈ.வெ.ரா. அவர்களும் ஒப்ப எழுந்து நின்றனர் காண். தம் எழுந்து நிற்பால் தம்மைக் கடவுட்கோளுக்கு மாறியவராக அவை எண்ணி விடுமோ? என்று மயங்கினாரல்லர். இறை வணக்கத்துக்கு எழும் கருத்திலரேனும், எழுந்து நிற்கும் மக்களவைக்கண் தன்னொருவன் இருப்பு நாகரிகமன்று என்று உட்கொணடார். கொள்கை வெறியற்று ஒழுங்குப் பற்றினராய், மக்களோடு நின்று, அவரெல்லாம் அமர்ந்த போது அமர்ந்தார். இப்பெருமகன் செயல் மக்கட் பண்புக்கு ஒரு காட்டு.

2. மூன்றாண்டுகட்கு முன் காரைக்குடிக் கம்பன் திருநாள் இரண்டாவது மாலை விழாக் கூட்டத்திற்கு, தமிழ்ப் பெரும் பேராசிரியர், பண்டிதமணி மு. கதிரேசனார் அவர்கள் தலைவர் ஆயினர். முதல் நாள் விழாவின் தலைவர், பொய்யில் அறிஞர்,