பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 273

அவ்வுலக இருப்பினை ஒருவன் ஏற்க; ஏலற்க, அது தெளிதற்கு வாராக் கற்பனைப்பட்டது: ஆகலான், அஃது ஒரு பிணக்குப் பொருளன்று. அதனை நம்பினானுக்குத்தான் வாழ்வு உண்டு என்றும், நம்பாதவனுக்கு வாழ்வு இல்லை என்றும் அறைவது அறிவியல் அன்று. இவ்வுலக அறங்களோ மெய்யன; யாவர்தம் வாழ்க்கைக்கும் உரியன; கடைப்பிடிக்க வேண்டுவன. இவ்வாறு ஆசான் அடிமுதலை ஒரு தலையாகத் துணிந்தார். துணிந்த பின்றை, மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று (222) என மறுத்த வாய்பாட்டால், அதிரா உலகியலைத் தனித்து நிறுத்திக் காட்டினார்.

வினைப்பயன் நுகர்தற்கு அமைந்தது அவ்வுலகம் என்பதனால், இவ்வுலகம் கொன்னே பயனில் செயலுக்கு மட்டும் உரியதோ என ஒரு குறுக்கு வினா எழ இடமுண்டு. விதைப்பிடம் வேறு, அறுப்பிடம் வேறா? நினைமின் மனக் கவலை மாற்றல் அரிது (7), சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் (31), சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (112), உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும்’ (166), வாழ்க்கை தவலும் கெடலும் நனித்து (856) என நல்ல தீய வினைகட் கெல்லாம், அதிகாரந்தோறும் புறநடை யின்றிப் பெருவரவினவாய் இம்மைப் பயன் சாற்றுவர் ஆசிரியர்.

இவ்வுலகப் பயனாவது அளவு மேற்பட்ட பயன். தவறாது பள்ளிக்கு நாள்தொறும் வரும் மாணாக்கன் கல்வியறிவு நன்னர்ப் பெறுகின்றான்; அதன் மேலும் பிறரினும் கூடிய நாள் வந்ததற்காக, வரவுப் பரிசு அளிக்கப்படுகின்றான். உரஞ் சேர்த்திப் பைங்கூழ் பெருக்கிய அறிவுடை உழவன் நெல் மிகுதி அடைகின்றான்; அதன் மேலும், பிறரினும் நெல் விளைவுப் பெருக்கம் செய்ததற்காக, இந்திய அரசால் வெற்றிப் பதக்கம் வழங்கப்படுகின்றான். பெருங்காமப் பட்டவன் முடிவில் காமவின்பம் இழக்கின்றான்; அதன் மேலும், நோய் பலவாய்க் கெட்டழிகின்றான். உலகிடை இங்ஙன் ஒரு வினைக்கு உரிய பயனோடு மேற்பயனும் அடைகுதும் அன்றோ? இத்தன்மைத்து அவ்வுலகப் பயன் என்று ஒருவகையால் கருதிக் கொள்க.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வானவூர்தி

எய்துப என்பதம் செய்வினை முடித்து 2.J. .