பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 51

யார்பின்னும் வால்பிடித்து இரப்பார் நிலை நோக்கி, பெருந் தகைமை பீடழிய வந்தவிடத்து ஊனோம்பும் வாழ்க்கை மருந்தோ (968) என்று இகழ்வர். இன்ன நிலையான் கெட்டான் எனப்படுதல் நன்று (967) என வழி காட்டுவர். இனைய குறள்களெல்லாம் உடல் உயிர் உள்ளம் பற்றிய பல்வேறு எண்ண நிலைகளுக்கொப்ப மக்களை அறிவித்தும் இடித்தும் இகழ்ந்தும் சொல்லிய பலநிலை யறங்களாகும்.

உலகம் மக்கள் கூட்டுறவால் நாகரிகப்படுவது. முற்றும் ஒதுங்கிய வாழ்க்கை என்பது உண்மையில் யார்க்கும் இன்று. தன் முயற்சி ஒருவர்க்கு எளிய இனிய கைப்பிடியாயினும், இயன்றவரை பிறர் உதவி மறுத்த வீறு நன்னோக்கமாயினும், யாரொருவர் முழு வாழ்க்கையும் தன் முயற்சி யொன்றானே கட்டி முடிக்கப்படுவது என்று விளம்ப வொல்லுமா? பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கை என்பது. ஆதலின், என்றும் பலர்க்குக் கடமைப்பட்டுள்ளோம் என்ற மறவா நல்லுணர்வு ஒரு மக்கட் பண்பாகும். உதவிகளுள் பொருளுதவியே சிறந்ததென மக்கள் கருதுப. இஃது ஆழ்ந்து காணாக் கூற்று. பொருட் பயனே இன்பமெனத் துணியாது. பொருளே இன்பமென்னும் அறியாமை யோடு ஒப்பது. போடும் சோறு பெரிதென மகிழாது, அரிசியும் அதனினும் காசும் சிறப்பின என்று அவாவும் பிச்சைக்காரன் அறிவை நிகர்ப்பது. பொருள் பொதுவுடைமைப் படினுங்கூட, அதனாலென், மக்கள் வாழ்க்கை தம்முள் உதவியின்றி இயங்காது. நோயினர்க்கு உழையிருப்பார் உதவியும், முதியோர்க்கு இளையோர் பணிவிடையும், ஒன்று கற்று ஒன்று கல்லார்க்கு அது கற்றார் அறிவும், ஒன்றில் மெலியார்க்கு அதனில் வலியார் பற்றும், தவறி விழுவார்க்குக் காட்பார் துணையும், கொள்கைப் பூசலார்க்கு அமைதி காட்டுவார் கேண்மையும், மானத்தால் நாணிடுவார்க்கு அஃதறுப்பார் சார்பும் என்றினைய அருளன்பு உதவிகள், உயிரென ஒரு பொருள் ஞாலத்து உளநாள்வரையும் வேண்டப் படும். ஆதலின் செய்ந்நன்றியறிவு. உயிர்ப்பண்புள் - மக்கட் பண்புள் - தலையாயது என்க.