பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளுவம்

இம்மனப்பாங்கினை வள்ளுவர் நன்கு அறிந்தவர். உலகோர் எதனைப் பற்றுகின்றனரோ, அப்பற்று வழியாகவே தூய்மை யூட்டல் நம் புலவர் பெருமகன் செயல்முறை யாதலின், செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து (112)

என்று குறள் யாப்ப. நும்பொருள் நும்மக்களைச் சேர வேண்டுதிரேல், வணிகர் ஆகுக, பிற துறையினர் ஆகுக, நடுவுநிலையோடு ஈட்டுமின் என நெறித்துய்மை விதிப்பர்.

கேள்விப் பெருமக்களே! நூறாயிரத்துக்கு மேற்பட்ட தொகை யினராய் நாம் இங்குக் குழுமியிருக்கின்றோம். நம் திருக்குறட் பற்று அறிவாகவும் செயலாகவும் விளைய வேண்டும். நம்முட் சிலர் இதுவரை மடிமடிப்பட்டு முடங்கிக் கிடந்திருக்கலாம். சோதிடம் பார்த்துப் பார்த்து நல்லூழ் இல்லை என்று அறிவு மழுங்கி யிருக்கலாம். நல்லோர்க்கு இது காலம் இல்லை என்று உலகம் பழித்து வாளா உடல் சுமந்திருக்கலாம். ஈட்டமுனைந்து குற்றமே பெருக்கி வஞ்சனை அணிந்து மனமாசு படிந்திருக்கலாம். அறைகுறை முயற்சியினராய்க் கொட்டாவி விட்டிருக்கலாம். கடந்த நிலை கிடக்க. சென்றது. கவலற்க, வள்ளுவப் பொருள் செவிமடுத்த இன்னே, உடல் முடக்கம் உதறுமின் அறிவு மழுக்கம் தீட்டுமின்! வாய்ப்பேச்சு மூடுமின் படி மாசு துடைமின் கொட்டாவி சுண்டுமின்! முயற்சிக்கு இடையூறாம் எதனையும் வாழ்வுப்பகை எனத் துணிமின் முயல்மின் முயற்சிப் படுமின் இன்று புதிதாய்ப் பிறந் தோம் என்று நம்காலப் பெரும்புலவன் பாரதி எண்ணியாங்கு, நாமும் வாழ்வு திருந்துவான் புத்தெண்ணம் எண்ணுவோம். அகத்துாய்மை காப்பான் செல்வத் தூய்மை காப்போம்.