பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 77

வேண்டும் என்பதுதான். பேணிப் பிறவும் தமபோல் செயின்’ என்ற அடிக்குக் கருத்தாகும். -

பதரோடு நெல்லும், கல்லோடு அரிசியும், கொழுப்போடு நெய்யும், நீரோடு பாலும், மணலோடு சருக்கரையும், குப்பையோடு கூலமும், இவ்வாறே பிறபலவும் விற்பனைச் சரக்குக்களாய் வணிகம் ஒரு கலப்புக் கலையாய்ப் பெருகி வருவதைக் காணுகின்றோம். அச்சரக்குகள் ஒரு நொடியில் விற்றுப் போவதையும் கண்டு கொண்டு இருக்கின்றோம். “கொள்வது உம் மிகை கொளாது, கொடுப்பது உம் குறைபடாது” என்ற உருத்திரங்கண்ணனார், வணிகர் பேரூதியம் கொள்வர், அளவு குறைத்துக் கொடுப்பர் என அன்று இரு வணிகக் குற்றம் காட்டினர். ஊதியம் மிகுந்து அளவு குறைப்பதோடு நில்லாது, சரக்கல்லாச் சரக்கும் கலந்து கொடுப்பர் என இன்று நாம் நுகர்ந்து வருகின்றோம். இவ்வாறு அல்நெறிக்கண் வணிகம், ஐயகோ! முன்னேறுகின்றது. மக்களும் உடல்நலம் கெடுக்கும் இக்குற்றங் களை அறிவர். அரசும் நாடு கீழறுக்கும் இக்குற்றங்களை நன்னர் அறியும். நாட்டு வயலில் மக்கட் பயிர் அழிய வணிகக் களைகள் இடமெல்லாம் தோன்றிப் பரவுவதை அரசு என்னும் கண்ணாரப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொடுங்கோன்மை என்று சிலர் தூற்றுவர்கொல் என அஞ்சி, அவ்வுழவன் செங் கோலால் தீமைக்களை பறிக்கவும் நடுங்குகின்றான். எனைப் பெருந் தீமைகளும் குடியாட்சி என்னும் பெயரால், வளர்ந்தோங்கிச் செல்கின்றன. பிறவும் தமபோல் வாணிகம் செய்யாதார்க்கு இன்று நல் வாணிகம் ஆதலைக் காணுங்காலை, பொய்யில் புலவர் கூற்றும் இவ்வணிகர்பால் பொய்ப்பட்டதுபோலும்; ஏழை மக்கள் படும் இன்னல் கண்டும், குழவிகள் நெஞ்சு என்பு தோன்ற உரமின்றிக் கூடாதல் கண்டும், குறள் பிறந்த நாட்டின் குணக்கேடு கண்டும், உளமுடையார் வெதும்பாரோ, சொன்மின்!

மக்கள் எனைத்து வகையானும் பொருள் ஈட்டும் நோக்கம் யாது அறத்துக்கு வழங்கவேண்டும் என்று ஈட்டுவாரினும், துய்க்கவேண்டும் என்று ஈட்டுவாரினும் தம் பிள்ளைகட்கு வைக்க வேண்டும் என்று ஈட்டுவாரே சாலப்பலர். இம்மகவு அன்பன்றோ கொடாதும் உண்ணாதும் பொருள் சேர்ப்பதற்குக் காரணமாவது.