பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வள்ளுவர் இல்லம்

நாமும் எந்தப் பதிலுதவியும் செய்ய முற்படுவதில்லை. அம்மேகத்தைப் போலவே, ஒவ்வொருவரும் எப்பதிலுதவி யையும் எதிர் பாராமல் உலகிற்கு உதவவேண்டும்; அதுவே சிறந்த ஒப்புரவு எனப்படும். தென்னை, வாழை, நெல், கரும்பு, ஆடு, மாடு முதலியவையெல்லாம் நம்முடைய உழைப்பினையும் உதவியினையும் பெற்றே நமக்குப் பதிலுதவி செய்தலின், அவற்றை விட்டு, நமது உதவியை என்றும் நாடாத மேகத்தையே ஈண்டு எடுத்துக் கூறிய வள்ளுவரின் உள்ளத் திறனையுணர்க. ஒருவர் கைக்கும் மற்றொருவர் கைக்கும் மாறி மாறி வழங்கப் படுதலால் பண்டமாற்றுப் பதிலுதவிக்குக் “கைம்மாறு” என்னும் பெயர் ஏற்பட்டது. இக்குறளில் கடப்பாடு என்றது ஒப்புரவை, கடப்பாட்டின் நேர் பொருள் கடமைப்பட்ட செயல்” என்பதாகும். உலகில் எவரும் பிறருதவி ஒரு சிறிதுமின்றித் தாமே தனித்து வாழ முடியாது; எனவே, தமக்கு உலகினர் உதவி செய்வது போலவே தாமும் உலகிற்கு உதவி செய்யக் கடமைப் பட்டவர் தாமே? அக்கடமைப் பாடே - கடப்பாடே ஒப்புரவு எனப்பட்டது. ஒப்புரவிற்கு இவ்வளவு நுட்பமான பெயர் கொடுத்த வள்ளுவரின் திறன் என்னே!

முயற்சி செய்து உழைத்து ஈட்டிய பொருள்கள் பிறர்க்கு உதவுவதற்கே உரியனவாகும்; எனவே எவ்வளவு பொருள் சேரினும், தக்கவர் உலகிற்கே உதவிவிடுவர் என்பது புலப்படுமன்றோ?

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு'